திமுக Vs பாமக: ராமதாஸ் ட்வீட்டால் வார்த்தைப் போர்; வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் என்ன நடக்கிறது?

வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமனை கடத்திச் சென்று, தி.மு.க தரப்பு மிரட்டியதாக, கடந்த 6-ம் தேதி இரவு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். மறுநாள் காலையே, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் ட்விட்டரிலேயே ராமதாஸின் அந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க, தி.மு.க இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் முற்றியது.

இதனால், மாநகராட்சியின் 60 வார்டுகளிலேயே… இந்த 24-வது வார்டு தேர்தல் மட்டும் கவனம் பெற்றுள்ளது. இங்கு அ.தி.மு.க போட்டியில்லை. அ.தி.மு.க வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதால், தி.மு.க-வும், பா.ம.க-வும் நேரடியாக மோதுகின்றன. அந்த வார்டின் களநிலவரம் குறித்து விசாரித்தோம்.

ராமதாஸ்

மூலக்கொல்லைப் பகுதியை உள்ளடக்கிய மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க சார்பில் எம்.சுதாகர், பா.ம.க சார்பில் ஆர்.டி.பரசுராமன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் கவுன்சிலர் சிவாஜியின் மகன் வினோத்குமார் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். குளறுபடி காரணமாக அ.தி.மு.க வேட்பாளர் வினோத்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க மாற்று வேட்பாளரான காலேஷா என்பவரும் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால், அந்த வார்டில் தி.மு.க, பா.ம.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், 5-ம் தேதி இரவு வேட்பு மனுவை வாபஸ் பெறக்கோரி பா.ம.க வேட்பாளர் பரசுராமனை தி.மு.க-வினர் மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டி, ராமதாஸ் ட்விட்டரில் சாடியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தனது ஹோட்டலுக்கு பா.ம.க வேட்பாளர் பரசுராமன் வந்து சால்வை அணிவித்துச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு, பா.ம.க தரப்பை அலற வைத்தார். “ராமதாஸ் அவர்களே… பா.ம.க வேட்பாளர் பரசுராமனை யாரும் மிரட்டவில்லை; கடத்தவுமில்லை. மாறாக 24-வது வார்டில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்தார். எங்களுக்குச் சால்வை அணிவித்து, தி.மு.க-வில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பிருக்கிறது. எனவே, தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டதாக”ராமதாஸின் ட்வீட்டை ரீ-ட்விட் செய்திருந்தார் நந்தகுமார்.

தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு சால்வை அணிவிக்கும் பரசுராமன்

அதோடு விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்த நேரத்தில், பிப்ரவரி 12-ம் தேதி வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவைச் சந்தித்து தனக்கு ஆதரவுக் கோரினார் பா.ம.க வேட்பாளர் பரசுராமன். “கடந்த வாரம் தி.மு.க மாவட்டச் செயலாளருக்குச் சால்வை; இந்த வாரம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு சால்வை’’ என பா.ம.க வேட்பாளர் பரசுராமன் அட்ராசிட்டி செய்ததால், 24-வது வார்டு மீண்டும் பரபரப்புக்குள்ளானது. அ.தி.மு.க மாவட்டச் செயலாளரைச் சந்தித்து சால்வை அணிவிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானதால், பா.ம.க தலைமை அந்தக் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்கியது.

“பா.ம.க தனித்துப் போட்டியிடுகிறது. நாங்கள் தோற்றாலும் அ.தி.மு.க-வின் தயவு வேண்டாம். வேட்பாளர் பரசுராமன் எதுவுமே தெரியாத மண்ணு; அவரை அங்கேயும் இங்கேயும் உருட்டுகிறார்கள். மாவட்டத் துணைச் செயலாளர் சரவணன்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரிடம் அழைத்துச் சென்றார். அதனால்தான் சரணவனைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்’’ என்று பா.ம.க தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்குச் சால்வை அணிவித்த பா.ம.க வேட்பாளர் பரசுராமன் படத்தை ட்விட்டரில் நேற்று வெளியிட்டு, பா.ம.க மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார் தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார். “கெட்டப்பை மாற்றினீர்களே; கேரக்டரை மாற்றீனீர்களா?’’ என்று வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் இளவழகனிடம் கேள்வி எழுப்பியிருந்தார் அவர்.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு சால்வை அணிவிக்கும் பரசுராமன்

தி.மு.க மாவட்டச் செயலாளரின் ட்விட்டர் பதிவிக்கு, ஃபேஸ்புக் வழியாக பதில் அளித்தார் பா.ம.க மாவட்டச் செயலாளர் இளவழகன். “கால்களையும், வால்களையும் பிடித்து ஆட்ட வேண்டாம் நந்தகுமார்’’ என்று அவர் வைத்த வார்த்தைகளால், பிரச்னை நீண்டுக் கொண்டே போகிறது.

“இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் அ.தி.மு.க மௌனம் சாதிப்பதாகவும் எண்ண வேண்டாம். 24-வது வார்டில் தி.மு.க, பா.ம.க இடையே வன்முறையைத் தூண்டிவிடவும் உள்ளூர் பகுதி அ.தி.மு.க-வினர் திட்டம் வகுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன. அதுவும், மனு நிராகரிக்கப்பட்ட கோபத்தில், ஏதோ சதித் திட்டம் தீட்டப்படுகிறது” என்கிறார்கள் தி.மு.க தரப்பில்.

வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக 24-வது வார்டில் வசிப்பதால், அவர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து பா.ம.க காய் நகர்த்துகிறது. ஆனால், பா.ம.க வேட்பாளர் பரசுராமனே பஞ்சாயத்தை இழுத்துவிடுவது, அக்கட்சித் தலைமையையே கடுப்படையச் செய்திருக்கிறது. வேட்பாளர் என்ற ஒரே காரணத்தினால்தான் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்ற தகவலையும் பகிர்கிறது பா.ம.க தரப்பு.

பா.ம.க வேட்பாளரின் நிலையற்ற முடிவால், வாக்குகள் தி.மு.க பக்கம் மடை மாற ஆரம்பித்திருக்கின்றன. அமைதியாக இருந்தபடியே களத்தில் முன்னேறிச் செல்கிறார் தி.மு.க வேட்பாளர் சுதாகர். தி.மு.க நிர்வாகிகள் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புக் கொடுத்தால் சுதாகரின் வெற்றி உறுதிசெய்யப்படும் என்பதே கள நிலவரம்.

தி.மு.க வேட்பாளர் சுதாகர்

இந்த நிலையில், 24-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை அலசினோம். தி.மு.க வேட்பாளர் சுதாகருக்கு 42 வயதாகிறது. அவரின் சொத்து மதிப்பு ரூ.8.01 கோடி என கணக்குக் காட்டியிருக்கிறார். அவரின் மனைவி பெயரில் 21 லட்சம் ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. சுதாகர் பி.இ சிவில் இன்ஜினீயரிங் படித்தவர் என்பதும் அவரின் கிராப்பை உயர்த்திக் காட்டுகிறது.

பா.ம.க வேட்பாளர் பரசுராமனுக்கு ‘ஆர்.டி.பி’ பெயரில் வேலூரில் நாற்பதுக்கும் அதிகமான ஆம்புலன்ஸுகள் இயங்குகின்றன. கடந்த நிதியாண்டில் அவர் 4,82,260 ரூபாயை தனது வருமானமாகக் காட்டியிருக்கிறார். அவர் மனைவி சரிதா பெயரில் 4,94,850 ரூபாயை வருமானமாகக் காட்டியுள்ளார். தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து 43,99,000 ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பா.ம.க வேட்பாளர் பரசுராமன்.

Also Read: பாமக வேட்பாளர் கடத்தல்? ராமதாஸ் ட்வீட்டால் கொதிக்கும் திமுக! – என்ன நடக்கிறது வேலூரில்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.