திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதியில் பிளஸ் 2 வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பொன்குமார் இன்று (பிப்.14) ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ‘திருப்புதல் தேர்வு’ நடைபெறுகிறது. இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கான ‘வினாத் தாள்’, சமூக வலைதலங்களில் வெளியாகி, செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதியில் உள்ள மாணவர்களிடையே கடந்த 2 நாட்களுக்காக பகிரப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வந்தவாசி அருகே உள்ள பிரபல தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து பள்ளிக் கல்வித் துறை கொடுத்த புகாரின் பேரில் பொன்னூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் தனியார் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பொன்குமார் இன்று விசாரணை நடத்தினார். மேலும் அவர், வந்தவாசி மற்றும் செய்யாறில் இயங்கும் குறிப்பிட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்தி உள்ளார்.
அப்போது தலைமை ஆசிரியர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள், வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பொறுப்பாசியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது விசாரணை அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.