சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பெரம்பூர் பகுதியில் 37-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் டில்லி பாபுவுக்கு ஆதரவு திரட்டினார்.
தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அடிபட்ட நச்சு பாம்புகள். ஆனால் இன்னும் உயிர் இழக்கவில்லை.
பா.ஜனதா இந்தியாவுக்கே ஆபத்தான கட்சி. அ.தி.மு.க. தமிழகத்துக்கு ஆபத்தான கட்சி. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கட்சிகள்.
இந்த இரண்டு நச்சுப்பாம்புகளும் உயிரற்று போக வேண்டும் என்றால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள்.
மோடியும், எடப்பாடியும் இரவில் ஒன்றாக பேசிக் கொள்கிறார்கள். பகலில் தனித்தனியே பேசுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தம் கொண்ட நம் நாட்டில் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க இடம் கொடுத்து விடக் கூடாது. அதற்கு இரண்டு கட்சிகளுக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள்.
நல்லாட்சிக்கும், மக்கள் இடையே இணக்கமான வாழ்க்கைக்கும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்… நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- இன்று 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி