‘மிஸ்டர் ஐ.பி.எல்’க்கு பிரியாவிடை.. சோகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்!

பெங்களூரு,
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் நேற்று தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்று வந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை ஆட்டக்காரரான அவருக்கு இப்போது 35 வயதாகிறது.
கடந்த 2 சீசன்களாக அவரது ஆட்டத்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் அவர் துபாயில் நடைபெற்ற 2020ம் ஆண்டு ஐ பி எல் தொடரில் பங்கேற்கவில்லை. அதன்பின் இந்த சர்ச்சை பூதகரமானது. அந்த தொடரில் சென்னை அணி லீக் சுற்றுடன் படுதோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து ரெய்னா இல்லாததே சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் கடந்த ஆண்டு ஐ பி எல் தொடரில் அவர் மீண்டும் பங்கேற்று சென்னை அணிக்காக விளையாடினார். எனினும் காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை.
‘சின்ன தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா இல்லாதது சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐ பி எல் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே.
களத்தில் சக வீர்ரகளை ஊக்கப்படுத்துதல், துடிப்பான பீல்டிங், துல்லியமாக ரன் அவுட் செய்வது, பகுதிநேர பந்துவீச்சாளர், உள்ளே-வெளியே(இன்சைட் அவுட்) கிரிக்கெட் ஷாட் அடிப்பதில் கில்லாடி என்று பல்வேறு திறன்களுடன் வலம் வந்தவர் ரெய்னா.
மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், 2014ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக பேட்டிங் செய்து அவர் எடுத்த 87 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால்  என்றும்  மறக்க முடியாது. முக்கியமான அந்த போட்டியில் ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள்(12 பவுண்டரிகள், 6 சிக்சர்கள், 348 ஸ்டிரைக் ரேட்) உடன் விளையாடினார். இறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.அந்த போட்டியில் சென்னை அணி 202 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
அவர் இதுவரை 205 ஐ பி எல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 சதம் உள்பட 39 அரைசதங்கள் அடங்கும். இதன்மூலம், ஐ பி எல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். 
ஐ பி எல் தொடரில் ரெய்னாவின் சாதனைகள் சில:-
 *ஐ பி எல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் 
 *ஐ பி எல் தொடரில் அதிக கேட்ச்சுகள் 109 கேட்ச் பிடித்த வீரர் 
 *சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக அரைசதங்கள்(33) அடித்த வீரர்
 *சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக பவுண்டரிகள் (425)
 *சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள்(180) அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் உள்ளிட்டவை அடங்கும்.
 
ஏதாவது ஒரு அணி ரெய்னாவை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடம் வரை அவரை எடுத்துக் கொள்ள, சென்னை அணி உட்பட எந்த அணியும் முன்வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.