நியூயார்க்: வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் ‘டைனோபேபிஸ்’ (Dinobabies) எனக் குறிப்பிட்டு, அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 3,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தொழில் போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடியை இந்நிறுவனம் 2010 இறுதியில் சந்திக்கத் தொடங்கியது. இதையடுத்து, வயதான அதிக சம்பளம் பெறும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து புதிய ஊழியர்களை பணி அமர்த்தி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள் தாங்கள் தவறான முறையில் பணிநீக்கம் செயயப்பட்டதாகக் கூறி சான் பிரான்சிஸ்கோ, டெக்ஸ்சாஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
2019 வரையிலுமே இந்நிறுவனத்தில் அடிக்கடி வேலை நீக்கங்கள் நடைபெற்றன. இதில் நியூயார்க் நீதிமன்றத்தில் 2010-ல் நடந்த மாபெரும் லேஆஃப் தொடர்பான வழக்கில், வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் ‘டைனோபேபிஸ்’ (Dinobabies) எனக் குறிப்பிட்டு அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் மையமாக உள்ளது.
அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனத்தின் அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட் இ-மெயில் உரையாடல்கள் வயதின் அடிப்படையில் ஊழியர்களை மிகவும் மோசமான வகையில் பாகுபடுத்தியுள்ளது. எனவே, அப்போதிருந்த அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற நீதிபதி, இந்த இ-மெயில் அனுப்பிய அதிகாரிகளின் பெயர் விவரம் அடங்கிய ஆவணங்களை வெளியிடுமாறு ஐபிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஐபிஎம் நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”எங்களின் நிறுவனம் இதுபோன்று வயது அடிப்படையிலான பாகுபாட்டை எப்போதுமே கடைப்பிடித்ததில்லை. குறிப்பிட்ட இ-மெயில்களுக்குப் பின்னர் நடந்த லேஆஃப் நிறுவனத்தின் வர்த்தக நிலைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதே தவிர, வயதின் காரணமாக அல்ல’’ என்று கூறியுள்ளார்.
மேலும், 2022ல் ஐபிஎம் நிறுவனத்தின் ஊழியர்களின் மத்திய வயதாக 48 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் வெளியானதாகக் கூறப்படும் 2010-லும் மத்திய வயது 48 ஆகவே இருந்தது என்று கூறியுள்ளார். அத்துட்ன, ஐபிஎம் இமெயில் எனக்கூறப்படும் அந்த மெயில்களில் உள்ள மொழிநடையானது ஐபிஎம்மின் மொழிநடையே அல்ல. எங்களின் மொழி மாண்பில் குறைவில்லாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் லிஸ் ரியோர்டன், ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஐபிஎம் காலங்காலமாக வயது அடிப்படையில் ஊழியர்கள் மீது பாகுபாடு காட்டுகிறது. ஆனால் இப்போது தந்திரமாக அவற்றை மறைக்கிறது” என்று கூறியுள்ளார்.