லண்டன்:
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி விட்டு அதனைதிருப்பி செலுத்தாமல் மோசடிசெய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார்.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா லண்டனில் ரிஜண்ட் பார்க் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார்.
ரூ. 200 கோடி மதிப்புள்ள இந்த பங்களாவை சுவிட்சர் லாந்தின் யூ.பி.எஸ். வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு அடமானம் வைத்திருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் காலக்கெடுவுக்குள் கடனை திருப்பி செலுத்த வில்லை.
இதையடுத்து லண்டன் கோர்ட்டில் வங்கி சார்பில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு லண்டனில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்து விஜய் மல்லையா, அவரது குடும்பத்தினர் வெளியேற வேண்டும். பங்களாவை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தது.
லண்டன் சொகுசு பங்களா பறிமுதல் செய்யப்படுவதை தடுக்க விஜய் மல்லையா வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வேறு சொத்துக்களை விற்று லண்டன் சொகுசு பங்களாவை மீட்க அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து பஹாமாசில் உள்ள சொத்துக்களை விற்க அனுமதிக்க கோரி அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விஜய் மல்லையாவின் பஹாமியான் அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களை அடமான தொகைக்கு செலுத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து லண்டன் சொகுசு பங்களாவை மீட்க அதன் அடமான தொகைக்கு பஹாமாசில் உள்ள சொத்துக்களை விற்கிறார். இதன் மூலம் அவர் சொகுசு பங்களாவில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து அங்கு தங்கி இருக்க முடியும்.
இதையும் படியுங்கள்… தமிழகத்தில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு