ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக முத்தையா அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் முத்தையா மற்றும் கட்சியினர் காலை முதலே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணி அளவில் பிரசாரத்தை முடித்த அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவர் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் முத்தையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த அவர் சிறிது நேரத்திலேயே மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும் பத்தினர் உடனடியாக அவரை வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் முத்தையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தி.மு.க. வேட்பாளரின் திடீர் இறப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தி.மு.க.வினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த தி.மு.க. வேட்பாளருக்கு சுந்தரலட்சுமி என்ற மனைவியும், முத்துஈஸ்வரி, தனலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப் பதிவுக்கு முன்பு இறந்தால் அந்த தொகுதி அல்லது வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் இறந்துள்ளதால் அந்த வார்டு தேர்தல் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான முறையான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்…
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள்- கேரள அதிகாரிகள் ஆய்வு