வாசலோடு நிறுத்தி… பர்தாவைக் கழற்றிய டீச்சர்.. கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பு!

கர்நாடகத்தில் இன்று பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டபோது
ஹிஜாப்
தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கின.

கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் போடுவது தடை செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சினை உருவாகி போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் இன்று 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை வாசலோடு நிறுத்தி அதை அகற்றிய பின்னரே பள்ளிக்குள் ஆசிரியர்கள் அனுமதித்தனர்.

பள்ளி வளாகத்திற்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே நின்று ஹிஜாப்பை அகற்றுமாறு மாணவிகளை ஆசிரியர்கள் வலியுறுத்தியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளியில், ஹிஜாபுடன் வந்த மாணவிகளை ஒரு ஆசிரியை ரோட்டிலேயே தடுத்து நிறுத்தினார். அதை அகற்று அகற்று என்று அவர் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அவருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மூண்டது.

பள்ளி வளாகத்திற்குள் போயாவது அகற்ற விடுங்கள், இப்படியா ரோட்டிலேயே அநியாயம் செய்வீர்கள் என்று பெற்றோர்கள் கோபத்துடன் கூறினர். இதனால் அந்தப் பள்ளிக்கூட வாசலில் பரபரப்பு நிலவியது.

மாணவிகள் மட்டுமல்லாமல் ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகளையும் அந்த ஆசிரியை விடவில்லை. ஒரு ஆசிரியை தனது மகளுடன் பள்ளிக்கு வருகிறார். மகளுக்கு ஹிஜாப் அணிவிக்கவில்லை. இதனால் அவரை உள்ளே அனுமதித்து விட்டனர். ஆனால் ஆசிரியை தடுத்து நிறுத்தப்படுகிறார். அவர் வாசலிலேயே, அதாவது ரோட்டிலேயே நின்று தனது பர்தாவை எடுக்கிறார், ஹிஜாபை அகற்றுகிறார். அதன் பின்னர் பள்ளிக்குள் போகிறார்.

இதேபோல இன்னொரு ஆசிரியை தனது ஹிஜாப், பர்தா உள்ளிட்டவற்றை அகற்றி தனது வாகனத்துக்குள் வைத்து விட்டுப் பின்னர் உள்ளே செல்கிறார். இப்படி ரோட்டிலேயே அனைவரையும் நிறுத்தி உடைகளை அகற்றச் சொல்வது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.