விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம் என்று ஆப்கனில் ஆட்சி செய்யும் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன.
இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச அங்கீகாரத்தை விரைவில் பெற்றுவிடுவோம் என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது. சர்வதேச சமூகங்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தை இப்போது ஆர்வம் காட்டுகின்றன. இதுவே, ஆப்கனில் ஆளும் தலிபான் அரசை சர்வதேச சமூகம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்கிறது என்பதற்கான சான்று. காபூலில் விரைவி வெளிநாட்டுத் தூதரங்கள் செயல்பாட்டுக்கு வரும். நாம் சில விஷயங்களில் கெடுபிடி காட்டுவது நமது கொள்கை இதைப் புரிந்து கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் நம் நாட்டின் மீதான தடைகளை விரைவில் விலக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
ஆனாள் ஆப்கனில் கடந்த வாரம் கூட போராடிய பெண்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. பெண் கல்வி, பெண்ணுரிமையை உறுதி செய்யுமாறு தொடர்ந்து உலக நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.