பெண்களின் உடைகளை வைத்து அரசியல்வாதிகள் உளறுவதும், குண்டக்க மண்டக்க பேசுவதும் அதிகரித்து வருகிறது. பாஜக எம்எல்ஏ ஒருவர் பெண்கள் உடை குறித்துப் பேசி பின்னர் மன்னிப்பு கேட்ட நிலையில் தற்போது
காங்கிரஸ்
எம்எல்ஏ ஒருவர் இதை வைத்து உளறியுள்ளார். என்ன கொடுமை என்றால் இருவருமே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
கர்நாடக கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் இஸ்லாமிய மாணவிகள்
ஹிஜாப்
அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பதிலுக்கு இந்து மாணவர்களும், அவர்களை எதிர்த்து தலித் மாணவர்களும் காவி மற்றும் நீலத் துண்டு அணிந்து போராட்டத்தில் குதிக்கவே கல்வி நிலையங்கள் களேபரமாகின. இதையடுத்து அவற்றுக்கு விடுமுறை விடப்பட்டது. கோர்ட்டுக்கும் இந்த விவகாரம் சென்றது.
மாணவர்கள் போராட்டங்கள் தற்போது அடங்கி விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்டு ஆளாளாக்கு உளற ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, ஆண்களை தூண்டும் வகையில் பெண்கள் சிலர் டிரஸ் போடுகிறார்கள். இதனால்தான் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தனது பேச்சு தவறாக இருப்பதை உணர்ந்து கொண்ட அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது என்பவர் இன்னொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஜமீர் அகமது ஹிஜாப் விவகாரம் குறித்துக் கூறுகையில், ஹிஜாப் என்பார் பர்தா என்று இஸ்லாமில் பொருளாகும். அதாவது முகத்தை மூடுவது என்று அர்த்தம். பெண்கள் வயதுக்கு வந்த பிறகு அவர்களது அழகை வெளியார்கள் பார்க்காதபடி மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ளது. இன்று நாட்டில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? பல பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. அதுதான் இதற்குக் காரணம்.
ஆனால் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை. தங்களைக் காத்துக் கொள்ள கொண்டு என்று விரும்புவோர் அணியலாம். இதுதான் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது என்றார் அவர். அவரது இந்தப் பேச்சும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஹிஜாப் அணியாதவர்களால்தான் பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்திருப்பதாக அவர் எப்படிக் கூறலாம் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் இன்றுதான் திறந்துள்ளன. இந்த நிலையில் அரசியல்வாதிகள் மாறி மாறி சர்ச்சையாக பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.