சண்டிகர்: 2 கோடீஸ்வரர்களுக்காக பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார், ஆனால் பஞ்சாப் விவசாயிகள் ஓராண்டாக பசியுடன் இருந்தனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது.
பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இந்தநிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பஞ்சாபின் ஹோஷியார்பூரில் ‘நவி சோச் நவா பஞ்சாப்’ என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டின் 2-3 கோடீஸ்வரர்களுக்காக பிரதமர் மோடி கடின உழைத்துக் கொண்டிருந்தார். இதனால் அந்த ஓராண்டில் பஞ்சாப் விவசாயிகள் குளிர்காலத்தில் பசியுடன் இருந்தனர். போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அவரால் முடியவில்லை. இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசுகள் இழப்பீடு வழங்கின.
ஒவ்வொரு பேச்சிலும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வேன் என்றும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். யாருக்காவது கிடைத்ததா? ஊழல், வேலை வாய்ப்பு பற்றி ஏன் பேசவில்லை? பணமதிப்பு நீக்கம் செய்தார், ஜிஎஸ்டியை விதித்தார். யாருக்கு பலன் கிடைத்தது?
நீங்கள் எதைப் பயிரிட்டாலும், அது உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது தக்காளி கெட்ச்அப் எதுவாக இருந்தாலும், உங்கள் விளைபொருட்களை பண்ணைகளில் இருந்து உணவுப் பூங்காவில் உணவு பதப்படுத்தும் பிரிவுக்கு நேரடியாக மாற்றுவதன் மூலம் நீங்கள் அனைத்தையும் தயாரிக்கலாம். பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.