அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகாரம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ஆகிய அமைச்சர்கள் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கென நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்களான அலிசப்ரி, நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.