வாஷிங்டன்: பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாளிகளாகிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை ஏற்றுக்கொள்ள இயலாது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று நேற்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய விவகாரங்கள் அமெரிக்கா வரை எதிரொலித்துள்ளது.
முன்னதாக நேற்று அவையில் பேசிய ராகுல் காந்தி, “இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம். உங்களின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது. இதுதான் தேசத்திற்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக வெள்ளை மாநில செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம், “இந்த விஷயத்தை நான் பாகிஸ்தானியர்களிடமும், சீனர்களிடமும் விட்டுவிடுகிறேன். அவர்களுக்கு இடையே உள்ள உறவைப் பற்றி அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், நான் ராகுல் காந்தியின் வார்த்தைகளை ஆதரிக்க மாட்டேன். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிகவும் முக்கியமான உறவு நீடிக்கிறது. நாங்கள் எப்போதுமே ‘எந்த ஒரு நாடும் அமெரிக்கா, சீனா என இரண்டில் ஒன்றின் சார்பாளராக இருக்க வேண்டும்’ என்று கூறியதில்லை.
அமெரிக்காவுடன் என்ன மாதிரியான உறவை வளர்ப்பது என்பதை எங்களது நட்பை விரும்பும் நாடுகளின் முடிவில் விட்டுவிடுவோம். ஆனால், எங்களுடன் உறவை வளர்க்கும் நாடுகளுக்குக் கிடைக்கும் நன்மைகளும், சலுகைகளும் மற்ற நாடுகளின் உறவைத் தேர்ந்தெடுப்போருக்கு கிடைக்காது என்பது மட்டும் உறுதி” என்று சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.