சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜ்புராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார்.
தலைவர்களின் முகத்தைப் பார்த்து ஏமாறாமல், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் “மறைந்திருக்கும் சக்திகளை” புரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியை குறிப்பிட்ட அவர், ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பை தேடுபவர்கள் பஞ்சாப் மாநிலத்தை அழித்துவிடுவார்கள, மாநிலம் பற்றி எரியும் என்று கடுமையாக பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் ராகுல் காந்தி தாக்கி பேசினார்.
‘பஞ்சாப் மாநிலத்திற்கு மிக முக்கியமான அம்சம் அதன் அமைதிதான். இது ஒரு ஆய்வகம் அல்ல, வேதியியல் ஆய்வுக்கூடமோ அல்லது பரிசோதனைகள் செய்யக்கூடிய இடமோ அல்ல. பஞ்சாப் ஒரு எல்லை மற்றும் உணர்வுபூர்வமான மாநிலம், காங்கிரஸ் கட்சி மட்டுமே பஞ்சாபை புரிந்து கொண்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும்’ என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதேபோல் பர்னாலாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, தீவிரவாதிகளின் வீடுகளில் கெஜ்ரிவாலை காண முடியும் என காட்டமாக விமர்சனம் செய்தார். 2017 தேர்தலின்போது மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தான் தீவிரவாதியின் வீட்டில் கெஜ்ரிவால் ஒரு இரவு தங்கியிருந்ததை ராகுல் காந்தி வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறார்.