ரஷ்யாவும் உக்ரைனும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள். ஏற்கெனவே இரு நாடுகளுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவிவந்தாலும், எப்போது உக்ரைன் அமெரிக்காவின் நேட்டா வில் இணைய முடிவு செய்ததோ அப்போதிலிருந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், அங்குப் படிப்பதற்காகச் சென்றிருக்கும் மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைனிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், அங்கு வாழும் இந்தியர்கள் தங்களின் சூழலை இந்திய தூதரகத்துக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற எல்லா ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.