4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் வந்த ஈ-மெயில் உத்தரவுகள் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்திய விசாரணையின் அறிக்கை வெள்ளியன்று வெளியான நிலையில், இன்றைய பங்குவர்த்தகத்தில் இது எதிரொலித்தது.
நிதி மற்றும் பண பரிமாற்றம் தொடர்பான விவகாரங்களை கண்காணித்து வரும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவர் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் தகவல்கள் அடிப்படையில் செயலாற்றி வந்தது உறுதிப் படுத்தப்பட்டதை அடுத்து சித்ரா மற்றும் அவரது தலைமை ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் செபி தலைவர் முறையே 3 கோடி மற்றும் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
ஹிமாலயத்தில் உள்ள யோகி இடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததை சித்ரா ஒப்புக் கொண்டதாகவும், அதேபோல் இந்த சித்தரை பற்றி தனக்கு 22 ஆண்டுகளாக தெரியும் என்று ஆனந்த் சுப்ரமணியனும் கடந்த 2018 ம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தனர்.
உலகின் மிகப்பெரிய பங்கு வர்த்தகச் சந்தைக்கு வந்த ஈ-மெயில் தகவல்கள் பெருநிறுவனங்களின் தேர்ந்த பணியாளர்கள் அனுப்பும் தகவல் போல் இருந்ததாக செபி நியமித்த தனியார் தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட [email protected] என்ற ஈ-மெயில் முகவரியுடன் பரிமாறப்பட்ட அனைத்து தகவல்களும் ஆனந்த் சுப்ரமணியத்தால் அனுப்பப்பட்டவை என்பதை இந்த தனியார் ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இருந்தபோதும், தனியார் ஆய்வு நிறுவனம் கூறுவது போல் இது ஆனந்த் சுப்ரமணியத்தின் வேலை அல்ல என்றும் அதனை உறுதிப் படுத்த போதிய ஆதாரம் இல்லை என்றும் இது தொடர்பான செபி அறிக்கையை வெளியிட்ட அதன் தலைவர் அனந்தா பருவா தெரிவித்துள்ளார்.
பெறுமதிப்புடைய ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் முன் பின் தெரியாத நபர்களின் ஆலோசனையின் படி வழிநடத்தியது வெளியான நிலையிலும் அவர்களை சிறு அபராதம் மட்டும் விதித்து வேறு எந்த முறையான விசாரணைக்கும் உட்படுத்தாமல் ராஜினாமா செய்ய அனுமதித்தது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
சித்ரா ராமக்ரிஷ்ணனுடன் தேசிய பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிய ‘மர்ம யோகி’