இம்ரானை விட்டு 3வது மனைவி பிரிவு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., பிரதமர் இம்ரான் கானை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான்-டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு வரக் கூடாது என, இம்ரான் கான் திருமணத்திற்கு முன்னரே புஷ்ராவுக்கு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

அதை மீறி புஷ்ராவின் மூத்த மகன் அவ்வப்போது வீட்டிற்கு வந்தது, இம்ரான் கானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, மனைவியுடன் மோதல் ஏற்பட வழி வகுத்ததாக கூறப்படுகிறது.மேலும், இம்ரான் கான் ஆசையாக வளர்த்த நாய்களை, தன் மதச் சடங்குகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி புஷ்ரா வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுவும், கணவன் – மனைவி இடையே விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் புஷ்ரா திடீரென இம்ரான் கானின் ‘பானி கலா’ மாளிகையில் இருந்து வெளியேறி, லாகூரில் உள்ள ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்று விட்டதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. இதனால், இம்ரான் கான், புஷ்ராவுக்கும் ‘தலாக்’ கொடுத்து விடுவார் என, அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவி தப்புமா

பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக ‘பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்கு தலைமைப் பொறுப்பு ஏற்க, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். அதனால், பாக்., மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி தலைவர் ஆவார் என, தெரிகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால், இம்ரான் கான் பதவி விலகி, ஆசிப் அலி சர்தாரி பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.