கீவ்: உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையில், அங்குள்ள அனைத்து இந்தியர்களும் வெளியேறும்படி, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுப்பதுடன், ராணுவ வீரர்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன. இதனால் அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலையில், அங்கு தங்கியிருப்பது கட்டாயம் இல்லாத நிலையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தியாவசியம் இல்லாத காரணங்களுக்காக உக்ரைனுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணங்களை தவிர்க்க வேண்டும். அங்கு தங்கி இருப்பவர்கள், அவர்களின் நிலை குறித்து தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தேவைப்படும் சூழ்நிலையில் உதவுவதற்கு ஏதுவாக இருக்கும். உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உதவி செய்வதற்கு தூதரகம் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement