உஜ்ஜைனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகா, கல்மோரா என்ற கிராமத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் டாக்டர் விஷ்ணு தர் வாகன்கர் ஆராய்ச்சி நிலையம் இந்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு அதிகாரி டாக்டர் துருவேந்திர ஜோதா கூறியதாவது:
2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நில அளவைப்பணியின்போது முதலில் இங்குகோயிலின் எஞ்சிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது நாங்கள் விரிவான அகழ்வுப் பணிமேற்கொள்ளவில்லை. 2-ம் கட்டமாக தற்போது கடந்த 15 நாட்களாக தொடர்ந்து அகழ்வுப் பணி மேற்கொண்டுள்ளோம்.
இதில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த பார்மர் காலத்து பூமிஜ் பாணி கோயிலின் எஞ்சிய பகுதிகள் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கோயில் உயர்த்தப்பட்ட தளத்தில் இருந்து 9 அடி உயரமும் 15 மீட்டர்நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்திக்க வேண்டும்.
கோயில் மண்டபத்தின் ஒரு பகுதியும் தோண்டி எடுக் கப்பட்டுள்ளது. இந்த சிவன் கோயிலில் துண்டு துண்டான ஒரு சிவலிங்கம், விஷ்ணு மற்றும் கருவறையின் மற்ற துண்டு துண்டான சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயில் கிழக்கு நோக்கிஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
– பிடிஐ