தன் காதலியின் கணவனைக் காப்பாற்றத் தன் இன்னுயிரையே ஈன்ற நாயகனைக் கண்டது நம் தமிழ்த் திரையுலகம். அது ‘நெஞ்சில் ஓர் ஆலய’மாக இன்று வரை நின்று நிலைக்கிறது. அதைப்போலவே தான் காதலித்த ஆணுக்காக ஒரு பெண் தன் பிராணனை விட்ட கதையும் உண்டு. அதுதான் 44 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘அன்னக்கிளி’. 1976-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் முதல்முறையாக இசையமைத்த ‘ராசய்யா’ இன்று இசைஞானியாக வளர்ந்து, இமயமென உயர்ந்து நிற்கிறார். உரலில் தானியம் குத்தும் பெண்களின் மூச்சுக்காற்றுக்கும் பின்னணி இசை கொடுத்ததன் மூலம், அந்தக் கிராமத்துப் பெண்களின் மனத்திலும் மன்னரானார்.
ஏழை வாத்தியாராகக் கிராமத்துக்கு வரும் சிவகுமாருக்கு விதவைத் தாயும், வயதான அக்காவும் ஊரில் இருக்க, கிராமத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி சுஜாதாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர, ஊர்ப் பணக்காரரின் மகள்(படாபட் ஜெயலட்சுமி) சிவகுமாரை விரும்புவார். அன்னம் அந்தக் கிராமத்தின் உள்ளூர் மருத்துவச்சி மட்டுமல்ல; நல்லது, கெட்டது என்று அனைவருக்கும் உதவும் ஆத்ம சிநேகிதி. நாயகனின் சோகத்தை விரட்டும் சுமைதாங்கி. நல்லவேலை கிடைக்க ஆயிரம் ரூபாயைக் கட்ட வேண்டுமென்ற கட்டாயம் வருகின்றபொழுது, சிவகுமார் பணத்துக்கு அல்லாட, தான் சிறுகச் சிறுகச் சேமித்த ஆயிரம் ரூபாயை அனாயாசமாக அள்ளிக் கொடுக்கும் ஆபத் பாண்டவி.
தமக்கையின் வாழ்வுக்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாயகன். அந்தத் தியாகத்தில் அன்னமும் பங்கேற்க, அன்னக்கிளியை அடைந்தே தீர்வது என்ற வெறியுடன் காத்திருக்கும் டூரிங் டாக்கீஸ் முதலாளி, தேங்காய் சீனிவாசன்.
அக்கினிக்கு இரையாகிப் பிறரைக் காப்பாற்றும் அன்னத்தின் வாழ்வு காவியமாகிப் போகிறது. அந்த ஆற்றோரக் கிராமமே அன்னக்கிளியால் ஆனந்தமடைகிறது. தன் அன்பால், சமூகச் சிந்தனையால், எதையும் எளிதாகக் கடக்கும் பண்பால் அந்தச் சிற்றூரை அவள் சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள். ’இந்தப் பணம் சும்மா பெட்டியில தூங்கிக்கிட்டுத்தான்யா இருந்துச்சு. தேவைப்படற ஒனக்காவது பயன்படட்டுமே. பயன்படாத பணம் எதுக்குய்யா?’ என்று சிவகுமாரிடம் எதார்த்தம் பேசும் அன்னம், நம் இதயத்தில் பசக்கென ஒட்டிக் கொள்கிறார். கிராமப்பெண்ணின் காதலின் ஆழத்தை இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியாது. தன் குடும்பச் சூழல் காரணமாகவே தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் விலக்குகிறான் என்பதறிந்து, அப்போதும் அவனுக்கு ஆறுதலாக இருப்பதே கிராமக் காதலின் புனிதம் என்பதை, கதை நமக்குணர்த்தும்.
’இதயத்தில் ஒருவன் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்ட பிறகு, கைப்பிடிக்காமல் போனாலும், காதலுக்கும் நினைவுகளுக்கும் பங்கம் வராது’ என்று பகர்ந்த காரணத்தாலேயே, இந்தப்படம் காலம் கடந்தும் பேசப்படுகிறது.
பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதித் தயாரிக்க, தேவராஜ்-மோகன் ஆகியோரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தோடு இளைய ராஜாவின் ‘என்ட்ரி’யும் சேர்ந்து கொண்டதே, படத்தின் பெரு வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
தி.நகரின் பேரூந்து நிலைய அருகிலுள்ள‘கிளப் ஹவுஸ்’ ஓட்டலில் பஞ்சு அருணாசலத்தைச் சந்திக்க ராசய்யாவும் அவர் அண்ணன் பாஸ்கரும், வசன கர்த்தா செல்வராஜால் அழைத்து வரப்படுகிறார்கள். பஞ்சு அருணாசலத்தைச் சுற்றியுள்ளவர்களோ புதியவர்களை ஏற்கக் கூடாது எனத் தூபம் போடுகிறார்கள். ’மருத்துவச்சி’, ‘சூடிக் கொடுத்தாள்’ போன்ற தலைப்புகளே படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், ராசய்யா தன் ஹார்மோனியத்தில்’ அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்று இசைக்க, அதையே தலைப்பாக்கினார் பஞ்சு. திறமைக்கு மதிப்பளித்து, ராசய்யாவை இளைய ராஜாவாக்கினார் அவர்.
முதல் நாள் சாங் ரெகார்டிங்குக்கு அனைவரும் தயார். லதா மங்கேஷ்கருக்கு நேரமில்லாததால், ஜானகி பாடுவதாக ஏற்பாடு. ஆனால், கரண்ட் கட். இளைய ராஜாவின் எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இளைய ராஜா முழுதாக அப்செட். ஜானகியே முன்னின்று ஏற்பாடுகளைச் செய்து பாடி, போட்டுப் பார்த்தால் எதுவுமே ரெகார்ட் ஆகவில்லை. உரிய பட்டன் ‘ஆன்’செய்யப்படவில்லையாம். மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பிய இளைய ராஜாவுக்கு அன்று ஆரம்பித்த நல்லநேரம், இன்று வரை தொடர்கிறது. அனைத்துக் கல்யாண வீடுகளிலும்’வாராயென் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ’, என்ற பாச மலர்ப் படப்பாடலும், ’மணமகளே மருமகளே வா வா…உன் வலது காலை எடுத்து வைத்து வா. . வா. . ’என்ற சாரதா படப்பாடலுமே களைகட்டிய காலத்தில், ராக்காயியையும், மூக்காயியையும் நெல் குத்தக் கூப்பிடும் பாட்டு பிரபலம் ஆனது. உரல், உலக்கை, திருவை என்று அத்தனையின் செயல் பாடும் அவை எழுப்பும் ஓசைகளும் ராஜாவின் இசையில் நம் மனத்துள் புகும்.
அதோடு… தன் காதலனான வாத்தியாரின் திருமணத்தை நடத்தவே அந்தக் கூப்பாடு என்று உணர்கையில்தான் அன்னத்தின் அடிமனமும், தன்னலம் கருதாத அவளின் தியாக வாழ்வும் நமக்குப் புரிய வரும். ‘அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே’ என்று சந்தோஷமாகவும், பின்னர் அதே பாட்டைச் சோகமாகவும் ‘அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றிலாடுதே’ என்று பாடுகையில், உள்ளத்தின் உள்ளே ஒரு துக்கம் புகுந்து விடுவதை நம்மால் தடை செய்ய முடியாது. ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில் அது வாழுது தன் நிழலில்… கல் மனங்களையும் கரைத்து விடும் இப்பாடலுக்கு என்றைக்கும் இருக்குந்தானே வரவேற்பு?
மாநில மொழிப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படம், திரையிடப்பட்ட உடனேயே பெரு வெற்றிக்கு வழி வகுத்திடவில்லை. அப்போதைய செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களின் உரிமையை வாங்கியவர் பெட்டி எடுக்க வரவேயில்லையாம். விசாரித்தபொழுது, வந்து கொண்டிருந்தபோது கார் ரிப்பேராகியதால் சகுனம் சரியில்லையென்று திரும்பிச் சென்று விட்டதாகக் கூறினாராம். அவசரம், அவசரமாக வேறு ஒருவருக்குப் பெட்டி கொடுக்க வேண்டிய இக்கட்டாம். சென்னை ராஜகுமாரி தியேட்டரில் முதலில் காற்று வாங்க, மெல்லத்தான் சூடு பிடித்ததாம். வசன கர்த்தா செல்வராஜும் பஞ்சுவும் அடிக்கடி தியேட்டர்களை வலம் வர, ஒரு நாள் ராஜகுமாரியில் மேலும் 3 டிக்கெட்டுகளை விற்று விட்டால் ‘ஹவுஸ் புல்’போர்டு போட்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட செல்வராஜ், கையில் காசு இல்லாததால், சைக்கிளில் எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தன் வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வந்து, அந்த 3 டிக்கட்டுகளையும் வாங்கி ஹவுஸ்புல் போர்டு மாட்ட வைத்தாராம். அப்புறமென்ன? 100 நாட்களையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடினாள் அன்னக்கிளி. சுஜாதாவும் சிவகுமாரும் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டனர்.
அப்பொழுது ‘குமுதம்’வார இதழில்’அரசு பதில்கள்’பாபுலர். வாசகர் ஒருவர், ’அன்னம் கேள்விப் பட்டிருக்கிறோம். கிளி பார்த்திருக்கிறோம். அன்னக்கிளி?’ என்று கேள்வியெழுப்ப, “சுஜாதா” என்று அரசு பதில் கூறியிருந்தது, இன்றளவும் பசுமையாய் மனதில் நிலைத்து விட்டது.
இந்தப்படம் இன்னொரு பெரும் பாடத்தையும் இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் போதிப்பதாய் அமைந்துள்ளது. தடங்கல்களும், தடைகளும் வந்தாலும் அவற்றைத் துச்சமென மதித்து நம் உழைப்பைக் கொடுத்தால், தொட முடியாத உயரத்திற்கும் சென்று சிம்மாசனம் போட்டு அமரலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் இசை ஞானி. இந்திப்படப் பாடல்களை ஹம்மிங் செய்ய ஆரம்பித்த இளைஞர்கள், இளைய ராஜாவின் வருகைக்குப் பிறகு அதனைப் பெரும்பாலும் மாற்றிக் கொண்டு விட்டார்களாம். பலரின் தூக்கத்திற்கு உறுதுணையாகவும், நோய்களுக்கு மருந்தாகவும், ஏங்கும் உள்ளங்களை இதமாகத் தடவிக் கொடுக்கும் இனிய கரங்களாகவும் ராஜாவின் இசை வலம் வருகிறது. அவரின் வாழ்க்கைப் பாடத்தைப் பின்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் துறைகளில் சாதனை படைக்க வேண்டும்; படைப்போம்!
– ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி