ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்களை ஒரு வாரம் தனிமைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டது.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து போராடப் போவதாக அறிவித்தனர். அதன்படி,சனிக்கிழமையன்று ஒட்டாவாவுக்குள் ஏராளமான லாரிகள் நுழைந்தன. போலீஸார் கணிப்பைவிட அதிக வாகனங்களும் போராட்டக்காரர்களும் வந்ததால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். தலைநகரில் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகரில் நுழைந்த போராட்டக்காரர்கள் போர் நினைவகம், அருங்காட்சியம் ஆகிய இடங்களில் நுழைந்தனர். போர் நினைவகத்தில் சிலர் நடனமாடினர். இதற்கு கனடா ராணுவ அமைச்சர் அனிதா ஆனந்த், ராணுவ தளபதி வைனே ஐர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.