லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆசிஷ் மித்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதற்கான சட்ட நடைமுறைகள் முடிந்து, சிறையில் இருந்து நேற்று அவர் வெளியே வந்தார். இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லி போராட்டத்தை முன்னின்று நடத்திய விவசாய சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் ராகேஷ் திகைத், ‘கொடூரமான குற்றத்தை செய்தவருக்கு 3 மாதங்களில் ஜாமீன் கிடைத்துள்ளது. லக்கிம்பூர்கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்,” என்றார்.