கேரள மாநிலம், பாலக்காடு பகுதிக்கு அருகிலுள்ள செராடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7-ம் தேதி அங்குள்ள குறும்பச்சி மலைக்கு தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி விழுந்த பாபு செங்குத்தான பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்த தகவல் அறிந்து கொச்சின் கப்பல் படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. பின்னர் இரண்டு நாள்களாக உணவின்றி தவித்திருந்த பாபுவை ஒரு வழியாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மீட்புப் பணி வீரர்கள் காப்பாற்றினர்.
இந்த நிலையில், கேரள வனத்துறையானது, தடையை மீறி மலையேற்றம் சென்றதாக பாபு மற்றும் அவரின் இரண்டு நண்பர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னதாக மலை இடுக்கில் சிக்கிக்கொண்ட பாபுவை மீட்பதற்கான பணியில் ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு குழுக்களுக்கு என மொத்தம் ரூ.75 லட்சம் செலவாகியதாகக் கூறப்படுகிறது.