நம்பூதிரியிடம் ஆரூடம் கேட்டவர்!குவாரி மாவட்டத்தில், அரசியல் களம் இப்பவே சூடு பிடிச்சிடுச்சின்னு சொல்லலாம். ஒரு பக்கம் ரெட்டி, மறு அரசியல் பிரவேசத்துக்காக போராட்டம் நடத்துறாரு. இன்னொரு பக்கம், கை கட்சில டிக்கெட்டுக்கான போராட்டம் சத்தமில்லாம நடக்குது.இப்போது, இங்கு அந்த கட்சி பலமா மாறிட்டு வர்றா மாதிரி இருக்கு. அதனால, அந்த கட்சில டிக்கெட்டுக்கான போட்டி அதிகமாயிடுச்சி. முன்னாள் மூத்த தலைவரோட மகன் ஒருவர், இந்த முறை டிக்கெட் தனக்கே கிடைக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்காக, சில சிறப்பு பூஜைகளை நடத்திட்டு வர்றாரு.அந்த வரிசைல, சமீபத்துல ஒரு கேரள நம்பூதிரி கிட்ட ஆரூடம் கேட்டிருக்காரு. அவரு, ‘101 திருநங்கையருக்கு சீதனம் கொடுத்தால் நினைச்சது நடக்கும்; டிக்கெட் கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்’னு சொல்லி இருக்காரு. அது மாதிரி அவரும், 101 திருநங்கையரை வர வச்சி சேலை, வெள்ளி விளக்கு, மஞ்சள், குங்குமம் அளித்துள்ளாராம்!அழகை மறைக்க தான் ‘பர்தா’வாம்!கர்நாடகாவுல பர்தா விவகாரம் இன்னும் முடிவுக்கு வரல. இது சம்பந்தமா, ஆளும் கட்சியை தவிர மற்ற யாரும் அழுத்தமான கருத்து தெரிவிக்கல. முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவங்க கூட, மவுனமாகத்தான் இருக்காங்க. அப்படியே சொன்னாலும், யாரையும் பாதிக்காத மாதிரி தான் சொல்லிட்டு வராங்க.அப்படித் தான் தலைநகர்ல இருக்கும் முக்கியமான முஸ்லிம் அசம்ளிக்காரரு பர்தா சம்பந்தமான கருத்து சொல்லி இருக்காரு. அது என்னான்னா, ‘முஸ்லிம் பொண்ணுங்க பர்தாவை ஏன் போடுறாங்கன்னா, அவங்க அழக மறைக்கத் தான் போடுறாங்க.’அவங்க அழகை பார்த்தா மத்தவங்க கண்ணு பட்டுரும். பார்க்கறவங்களுக்கு அழக பார்த்து, சில கெட்ட எண்ணங்கள் கூட தோணலாம். எனினும் இதை எல்லாரும் போடறதில்ல. பிடிச்சவங்க போடறாங்க. பிடிக்காதவங்க போடறதில்ல’ன்னு சாப்ட்டா பேசி இருக்காரு!மடாதிபதியை வச்சி பிரசாரம்!எல்லை மாவட்டத்தின் தேசிய கட்சியை சேர்ந்தவரு… ‘மாஜி’ அமைச்சரும் கூட. அடுத்த தேர்தல்ல தனக்கு சீட் கிடைக்கணும்னு, இப்பவே மேலிடத்துல துண்டு போட்டு வச்சிருக்காரு. இந்த முறை, இங்கு சொந்த கட்சில போட்டி அதிகம் இருக்கு. இவரோட போட்டி கோஷ்டிங்களே இவருக்கு எதிராக பிரசாரம் பண்ணிட்டு வராங்களாம்.அதனால, அவரு தொகுதி முழுக்க போய், நிலுவையில இருக்கற பணிகளை எல்லாம் ஆரம்பிச்சிட்டு வர்றாரு. ஒவ்வொரு தொடக்க விழாவுக்கும், மடாதிபதி ஒருவரை தவறாம கூப்பிடுறாரு.அவங்களும் வந்து இவரு நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவருன்னு பேசிட்டு போறாங்களாம். அந்த வகையில, அவரு இப்பவே பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டாருன்னு சொல்றாங்க. இவர மாதிரியே லட்சுமிகரமான அசம்ளிகாரரும், வளர்ச்சி பணிங்கற பேர்ல பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டாராம்!கோவாவில் பற்றிய நெருப்பு!சுற்றுலா மாநிலமான கோவாவில், தேர்தல் நடந்து முடிஞ்சிடுச்சி. அங்க, கை கட்சி சார்புல தேர்தல் அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல முக்கியமானதா மகாதாயி திட்டத்தின் மூலமாக, கோவா மாநில மக்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்னு வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கு.இத ஆதரிச்சி, இங்க இருக்கற தலைவர்கள் எல்லாம் அங்க போய் பிரசாரம் பண்ணிட்டு வந்திருக்காங்க. இதுக்கு இங்க இருக்கற கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவிச்சிருக்கு. மகாதாயி கர்நாடகாவுக்கு சொந்தம்னு போராட்டம் நடக்குது. இதுக்கு கை கட்சிக்காரங்களே ஆதரவு போராட்டத்துல கலந்திருக்காங்க. நடத்தியும் இருக்காங்க. இந்த நேரத்துல, அங்கு போயி நமக்கு எதிராக பிரசாரம் பண்ணினா எப்படின்னு, கேள்வி கேட்டிருக்காங்க.எதுக்கு இந்த இரட்டை வேடம்னு கேட்க யாத்திரைக்கு காரணமானவரையும், முதல்வர் ரேசில் இருக்கறவரையும் சந்திக்க முயற்சி பண்ணாங்க. அது முடியாததால, இனி அந்த தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துல, கருப்பு கொடி காட்ட முடிவு பண்ணி இருக்காங்களாம்!
Advertisement