நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களிடையே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய வண்ணாரபேட்டை பகுதி 48 மற்றும் 53வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது துணி தைத்தும், கறி வெட்டியும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியின் 37வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணவாள நகர் மீன் மார்க்கெட்டில் மீன் விற்று வாக்கு சேகரித்தார். அதேபோல், திருவள்ளூர் நகராட்சி 8வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஊர்வலமாக சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 164 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் , வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், செண்டை மேளம் அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் 65 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர், மரக்கன்று நட்டு வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கண்காணிப்பு கேமராவை காண்பித்து மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 71வது வட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செருப்பு தைத்து வாக்கு சேகரித்தார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியின் 13 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திருமண அழைப்பிதழ் போல் பத்திரிக்கை அடித்து வெற்றிலை-பாக்கு முகக்கவசம் வைத்து கொடுத்து மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27-வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வார்டு வார்டாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார். மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் சென்று மக்களிடையே அவர் ஆதரவு திரட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் 3வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர், இலவசமாக துணி தைத்து கொடுத்தும், இஸ்திரி போட்டுக்கொடுத்தும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.