தப்பித்தது ஏரி!ஆ.பேட்டை அருகேயுள்ள பிராங்க் அண்டு கோ ஏரியில் செடி கொடிகள், முட்கள் வளர்ந்து புதர் மயமாகி உள்ளது.பல்வேறு இடங்களின் சாக்கடை கழிவுகள் வந்து சேர்ந்து, ஏரியை நாசமாக்கி உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீர் வயல்களுக்கு பாசனமாக இருந்தது. நல்ல விளைச்சலை கொடுத்தது. தற்போது இந்த ஏரி, ஜந்துக்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது. இங்கு விஷப் பாம்புகள் சிலரை கடித்து பெரும் பாதிப்பை கொடுத்ததை அப்பகுதியினர் மறக்கவில்லை. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் ஆபத்தான கதியில் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் முன் புதுப்பிக்க வேணுமுன்னு அங்குள்ளவங்க கேட்குறாங்க.பிராங்க் அண்டு கோ ஏரி இருப்பதையே முனிசிபல் கவனத்துக்கு வந்ததாக தெரியல. ஒருவேளை இது மைனிங் பகுதியாக இருக்குமென எண்ணி ஏமாந்துட்டாங்களோ.ஏன்னா, முனிசிபல் நிலத்தை வளைத்து காம்பவுண்ட் போட்டு இது பாட்டன், பூட்டன் சொத்துயென சொந்தம் கொண்டாடுகிற பெரிய முதலைகள் கதைகளுக்கு பஞ்சம் இல்லை.முனிசிபல் நிலம் காலியாக இருக்குதென தெரிந்தாலே, பட்டா போட்டு பத்திரம் தயாரிக்கிறவங்க பார்வையில் பிராங்க் அண்டு கோ ஏரி தப்பித்ததோ!முடங்கியுள்ள ஆதார் ஆபிஸ்!அரசு பணிகள் அனைத்துக்குமே ஆதார் அட்டை மிக அவசியம். வங்கி கணக்கு தொடங்கவும், பென்ஷன் பெறவும், மருத்துவ சலுகைக்கும், ரேஷன், காஸ் இணைப்பு, பள்ளி, கல்லுாரி சேர்ப்பு என அனைத்து தேவைகளுக்கும் பயன்படுகிறது.மாநில வருவாய் அலுவலகங்களில் ஆதார் அட்டை பெற மையம் ஏற்படுத்தி இருக்காங்க. ஆரம்பத்தில் சச்சரவு இல்லாமல் முறையாக இலவசமாக சேவை நடந்தது.இங்கும் அப்புடி, இப்புடியென 100-, 200 ரூபா கறக்குறாங்கயென புகார் இருந்தது. அது அடங்கி விட்டது.அரசு சம்பளம் பெறும் சிலர், கிம்பளத்தை நம்பியே வண்டியை ஓட்டுறாங்க. ஊழல், லஞ்சம் ஒழிக்க கழுகு பார்வை செலுத்தப் படுவதால், எதுக்கு சேவை செய்யனும்னு, சிலர் ஆபிஸ் வேலைகளை மெத்தனமாக்குறாங்க.கோல்டன் சிட்டி வருவாய் துறை ஆபிசில் 15 நாட்களாக ஆதார் அட்டை பணிகள் முடங்கி உள்ளது. கம்ப்யூட்டர் ரிப்பேர்; சர்வர் வேலை செய்யல; நெட் வொர்க் வேலை செய்யலைன்னு பல காரணங்கள் சொல்றாங்க!விற்பனைக்கு வருதாம் மனைகள்!கர்நாடக வீட்டு வசதி வாரியம் வீட்டு மனைகளை விற்பனை செய்யப்போறாங்களாம். அதுவும், பெங்களூரு — சென்னை தொழிற் காரிடார் விரைவுச்சாலை பகுதியில் அனைத்து வசதிகளுடன் தரமான நகரம் ஏற்படுத்த போறாங்களாம். ஏற்கனவே, இச்சாலையை உருவாக்க விவசாயிகளிடம் இருந்து அரசு கையகப்படுத்தின நிலத்துக்கு உரிய பணம் போய் சேரவில்லையென விவசாயிகள் கொதிக்கிறாங்க.இந்நிலையில், அரசு நிலத்தை கர்நாடக வீட்டு வசதி வாரியம் கோல்டு சிட்டியில் வீட்டு மனை விற்பனை செய்யப்போறாங்களாம். இதற்காக பெமல் நகர், ஆ.பேட்டையில் ஆபிஸ் திறக்க போறாங்களாம். அங்கே சென்று நிலத்துக்கு முன் பணம் செலுத்தலாமென தகவலை வெளியிட்டிருக்காங்க.ஏற்கனவே, ஆஷ்ரியா வீடுகள், குடிசைமாற்று வாரிய வீடுகள், அம்பேத்கர், வால்மிகி, ராஜிவ், வாஜ்பாய் அவாஸ் யோஜ்னா திட்ட வீடுகள் வரப்போகுதுன்னு சொல்லி வராங்க.இவைகளை முந்திக்கொண்டுள்ளது கர்நாடக வீட்டு வசதி வாரிய வீடுகள். விலை நிர்ணயமும் செஞ்சிருக்காங்களாம்.இத்திட்டம் குறித்து அரசு தெளிவான விபரங்களை வெளிப் படையாக அறிவிக்க வேணும். தில்லுமுல்லு நடக்க விடாமல் தடுக்க உத்தரவாதம் தேவையென வீட்டு மனை தேவைப்படுவோர் கேட்குறாங்க.கோல்டன் சிட்டி அபிவிருத்தி குழுமமும் வீட்டு மனைகள் விற்கும் திட்டமும் கையில் வைத்திருக்காங்க. எல்லாமே அவுட்டர் சிட்டியில் பிளான் பண்ணி இருக்காங்க. அப்புடின்னா கோல்டு சிட்டி தரத்தை மறைக்க போறாங்களோ!என்னானது சிட்டி பஸ் சர்வீஸ்?கோல்டன் சிட்டியிலும் நான்கு ஆண்டுகளுக்கு முன், சிட்டி பஸ்கள் இயங்கியது. காரணமே இல்லாம நிறுத்திட்டாங்க.இதை கேட்பாரில்லை. இதனால், பஸ் வசதியின்றி உள்ளூர் வாசிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.சின்ன கண்ணு நகர், அல்லிக்கடை, செல்லப்பா நகர், பிராங்க் அண்டு கோ, கில்பர்ட்ஸ், கம்பெனி மருத்துவமனை, ஆண்டர்சன்பேட்டை, கிருஷ்ணாபுரம், ஹென்றிஸ், டோல்கேட், பெமல் நகர், ஆலமரம் என பஸ் சர்வீஸ் இயங்கியது.அசம்பிளி தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. மக்கள் சேவைக்காக பஸ் சேவை வேணுமுன்னு பலரும் எதிர்பார்க்கிறாங்க!
Advertisement