சென்னை: ‘தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. எஞ்சிய 13 விழுக்காடு மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும்‘ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ” கரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முறைகளை படிப்படியாக மாற்றுவதற்காக , பொது சுகாதார இயக்குநர் மற்றும் வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம். முதலில் நோய்த் தொற்று உள்ளவர்கள், உடனிருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இனிமேல், அறிகுறி உள்ளவர்கள் அனைவரும், எந்த இடத்தில் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று, நோய் தொற்றுள்ளவர்களுடன் உடனிருப்போர் மற்றும் தொடர்பில் இருப்பவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று, சுவாசப் பிரச்சினை என்று யார் வந்தாலும், கரோனா பரிசோதனை மருத்துவமனையாக இல்லாதபட்சத்திலும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேரும் இடங்களில், பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் இலவச பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கூறியிருக்கிறோம்.
எங்களின் கணிப்பு, பரிசோதனையின்படி 1600 பேர் தொற்று பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதன் பத்து மடங்கு – 16 ஆயிரம் வரையிலும், பாதிக்கப்பட்டவர்கள் 3200-ஆக இருந்தால், அதன் இருபது மடங்காக சோதனையை 32,000 வரையிலும் செய்யப்பட்டது. முப்பது மடங்காக இருந்தால், 50,000 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் இந்த அளவு பரிசோதனைகளை பின்பற்றுவது என்பது, தேவையின்றி மக்களைத் தேடி தேடி பரிசோதனை செய்ய வேண்டிய நிலையை உண்டாக்குவதாக தெரிவித்தனர். எனவே, இந்த பரிசோதனை மாதிரியை மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில், அறிகுறி உள்ள ஒவ்வொரு நபரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வரும் காலங்களில், உலக அளவில் கரோனா கட்டுப்பாடுகளில் அதிகமான தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழல்தான் உள்ளது. எனவே பொதுமக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இன்னும் அவசியமாகிறது. கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது, மருத்துவ வல்லுநர்கள் அறிவிக்காத வரை, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இரண்டாவது அலையில் மிகப்பெரிய தாக்கம் இருந்த போதிலும், டெல்டாவும், ஒமைக்ரானும் இருந்தபோதிலும், மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் பத்து மடங்கு குறைந்துள்ளது.
அதேபோன்று நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவு. தடுப்பூசியால்தான் இது சாத்தியமானது. இன்னும் 1.13 கோடி மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. நோய்த்தொற்று குறைவாக உள்ளது என்று கவனக்குறைவாக இருக்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் 6.37 லட்சம் பாலூட்டும் தாய்மார்கள் 5.05 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 3.74 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 45 முதல் 49 வயது உள்ளவர்கள் 1.45 கோடி அதாவது நூறு விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 15 முதல் 17 வயதுடையோர் 27.18 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
18 முதல் 44 வயது வரை உள்ள சில நபர்கள் சுமார் 30 லட்சம் பேர், அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்டோர் இந்த இரண்டு பிரிவும் சேர்ந்து ஒரு 45 லட்சம் பேர் இவர்கள் இன்னமும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், சமுதாயத்தில் நல்ல ஒரு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஏற்கெனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. எஞ்சிய 13 விழுக்காடு மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். மருத்துவ வல்லுநர்களின் கருத்துப்படி அவர்களுக்குத்தான் நோய் பரவக்கூடும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்தாலும், தொற்று பாதிப்பு சிக்கலானதாக இல்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விடுபட்டு போனவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்” என்று கூறினார்.