புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், நைஸ் வீடியோ பைடு, ஆப்லாக், ஆன்மையோஜி செஸ், ஆன்மையோஜி அரேனா, எம்பி3 கட்டர், பார்கோடு ஸ்கேனர், நோட்ஸ், யுயு கேம் பூஸ்டர், கரீனா ப்ரீபயர், பேட்லேண்டர்ஸ், விங்க், ரியல் லைட் மற்றும் அஸ்ட்ராகிராப்ட் ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.
சீன செயலிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக இதுபோன்ற தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் பிரபலமான டிக்டாக், யூசி பிரவுசர், வீசாட், பிகோ லைவ் உள்ளிட்டவை அடங்கும். இந்த செயலிகளின் செயல்பாடு நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி மத்திய அரசு தடை விதித்தது.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவ ஊடுருவலைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இரு நாடுகளிடையிலான எல்லைப் பிரச்சினை ஏப்ரல் 2020-லிருந்து நீடித்து வருகிறது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையிலான 3,400 கிமீ. நீண்ட தொலைவுப் பகுதி உள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதில் பிரச்சினை ஏற்பட்டது.
– பிடிஐ