பல்வால்:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார்.
குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தீப் சித்து வந்த கார் வேகமாக மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சோனிபட் காவல்துறை எஸ்.பி.ராகுல் சர்மா, தெரிவிக்கையில்,
சாலை விபத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தீப் சித்து என்ற அடையாளம் காணப்பட்ட நபர் சிகிச்சையின் போது இறந்தார், மேலும் ஒரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தீப் சித்து உயிரிழப்புக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான தீப்சித்துவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. இவ்வாறு தமது ட்விட்டர் பதிபில் சரண்ஜித் சிங் சன்னி பதிவிட்டுள்ளார்.