திருவனந்தபுரம்:
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் குரும்பாச்சி மலை பகுதி உள்ளது.
செரடு பகுதியை சேர்ந்த பாபு என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ந் தேதி மலைக்கு சென்றார். மலையேறும்போது கால் வழுக்கி தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கி கொண்டார்.
அவருடன் சென்ற நண்பர்கள், இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று பாபுவை மீட்க முயன்றனர். ஆனால் பாபு சிக்கி இருந்த பகுதி ஆபத்தான பாறை என்பதால் அங்கு தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து கேரள அரசு பேரிடர் மீட்பு குழுவின் உதவியை நாடியது. அவர்கள் ராணுவ வீரர்கள் துணையுடன் ஹெலிகாப்டரில் சென்று பாபுவை மீட்டனர்.
இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு குழுவினருக்கு ரூ.75 லட்சம் செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7-ந் தேதி பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் 9-ந் தேதி மீட்கப்பட்டார். அதன்பின்பு வீடு திரும்பிய பாபு மீது, வனத்துறையினர் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதை கேட்டதும் பாபுவின் தாயார் அரசுக்கும் வனத்துறை மந்திரிக்கும் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தன் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும், அவர் இனி இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டார் எனவும் கூறியிருந்தார்.
பாபுவின் தாயார் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கையை கைவிடுவதாக வனத்துறை மந்திரி கூறினார்.
வனத்துறையின் இம்முடிவுக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று வனத்துறை அதிகாரிகள் திடீரென பாபுவின் வீட்டுக்கு சென்றனர்.
அவர்கள் கடந்த 7-ந் தேதி உரிய அனுமதி இன்றி காட்டுப்பகுதிக்குள் சென்றது ஏன்? என்று பாபுவிடம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தபின்பு, அவர் மீதும், அவரது நண்பர்கள் மீதும் கேரள வனச்சட்டம் 1961, பிரிவு 27-ன்படி வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாபு மற்றும் அவரது நண்பர்களுக்கு 6 மாத ஜெயில் அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அனுமதியின்றி மலை ஏறுவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றனர்.