பாட்னா,
பாட்னாவில் உள்ள தலைமைச்செயலகத்தில், கொரோனா காரணமாக ஒரு மாத இடைவெளிக்குப் பின் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், ‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 2005-ம் ஆண்டு முதல், எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான வளங்களைக் கொண்டு மாநிலத்தை முன்னேற்ற முழு முயற்சி செய்கிறோம்.
பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளபோதிலும், பல மேம்பாட்டு குறியீடுகளில் இன்னும் தேசிய சராசரியைவிட பீகார் பின்தங்கியே இருக்கிறது. நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் இது தெரியவந்திருக்கிறது.
எனவே பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது மிகவும் முக்கியம். மாநில மக்களின் இந்த நியாயமான கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு பலவழிகளிலும் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பலன் கிட்டவில்லை. மத்தியில் முந்தைய காங்கிரஸ் அரசும் இவ்விஷயத்தில் எதுவும் செய்யவில்லை. பீகாரை போல பிற பின்தங்கிய மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரினால் அது குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும்.’
இவ்வாறு அவர் கூறினார்.