பி.கே. எனப்படும்
பிரஷாந்த் கிஷோர்
ஏப்ரல் முதல் வாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப் பிரபலமான, முக்கியமான
அரசியல்
உத்தி வகுப்பாளராக இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர ராவ் என இவர் கை பட்டு வெற்றி பெறாத தலைவர்களே இல்லை.
இந்த நிலையில் தற்போது தீவிர செயல்பாடுகளிலிருந்து பி.கே. ஒதுங்கியுள்ளார். இருப்பினும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் அவருக்கு தொடர்ந்து நல்ல தொடர்பு இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபடுமாறு பி.கே.வுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து தீர்க்கமான முடிவெடுக்க தீர்மானித்துள்ளாராம் பி.கே.
மேற்கு வங்காளத்தில் பி.கே. நிறுவனத்துக்கு எதிராக திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக வெளியான செய்திகளை அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். மீடியாக்களில் வருவது போல எதுவும் இல்லை. சாதாரண பிரச்சினைகள்தான். அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மார்ச் 10ம் தேதிக்குப் பிறகு முக்கிய முடிவு ஒன்றை பி.கே. அறிவிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. அரசியல் உத்தி வகுப்பாளராக இருந்து வந்த அவர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்தப் பொறுப்பும், பதவியும் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை. இதையடுத்து காங்கிரஸில் இணைய அவர் திட்டமிட்டார். அவரை கட்சிக்குள் கொண்டு வர சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கூட ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினர். ஆனால் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வரவில்லை. மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பி.கே.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ராகுல் காந்திக்கும் திடீரென பி.கே. மீது ஆர்வம் குறைந்து விட்டது. இதனால் அவரும் பி.கே.வை சேர்க்க வேண்டாம் என்று கூறி விடவே அந்தத் திட்டம் கலைந்து போனது.
இந்த நிலையில் மார்ச் 10ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதைத் தொடர்ந்து பி.கே.. தனது அரசியல் பயணம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் முதல் வாரத்தில் அவரது அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. பி.கே. என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அனைத்துக் கட்சிகளுமே ஆர்வமாக உள்ளன.