மும்பை:
மகராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவதாகவும், இந்த அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
“பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு, மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு அழைப்பு விடுத்தனர். அவ்வாறு செய்யாவிட்டால் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர். இதற்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள், எனக்கு நெருக்கமானவர்களை குறிவைக்கத் தொடங்கியது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது சாத்தியமில்லை. இதை மறைந்த பால் தாக்கரேவிடம் இருந்து கற்றுக்கொண்டோம். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது.
பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் மகன் நீல் சோமையா, பிஎம்சி வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் வாத்வானின் வணிக கூட்டாளியாக இருக்கிறார். பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட வேண்டும். இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிப்பேன்’ என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சஞ்சய் ராவுத்தின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான சமயத்தில் பதிலளிப்பதாக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறி உள்ளார்.