மக்களை ஏமாற்றம் மோசடி திட்டமான கிரிப்டோகரன்சியை தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை : ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பேச்சு

மும்பை : கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஒன்றிய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில், அதனை தடை செய்வதே இந்தியாவுக்கு  நல்லது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக  கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயில் 30% வரியாக செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து ஒன்றிய அரசு,  கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்துள்ளதாகவே பலரும் கூறினர். மாநிலங்களவையில் இது குறித்து பதில் அளித்த நிர்மலா சீதாராமன்,  கிரிப்டோ கரன்சியை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவும் இல்லை, தடை செய்யவும் இல்லை, வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபிசங்கர்,  கிரிப்டோ கரன்சி என்பது மக்களை ஏமாற்றம் மோசடி திட்டங்கள் போன்றது என்று குறிப்பிட்டுள்ளார்.  கிரிப்டோ கரன்சிகளை ஒரு நாணயமாகவோ, பண்டமாகவோ சொத்தாகவோ வரையறை செய்ய முடியாது, அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்புகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். மக்களை ஏமாற்றும் பேன்சி திட்டம் போன்ற  கிரிப்டோ கரன்சியை தடை செய்வதே இந்தியாவிற்கு நன்மை என்றும் ரவிசங்கர் கூறியுள்ளார்.  கிரிப்டோ கரன்சி வருவாய்க்கு ஒன்றிய அரசு வரி விதித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி துணை ஆளுநரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.