ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மாத குடும்ப ஓய்வூதியத்தை அதிகரித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆளும் பாஜக அரசு,
அரசு ஊழியர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
தலைநகர் சிம்லாவில், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத குடும்ப ஓய்வூதியத்தை 3,500 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.
இந்த ஓய்வூதிய உயர்வு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓய்வு பெற்ற சுமார் 43,000 ஊழியர்கள் திருத்தப்பட்ட
ஓய்வூதியம்
மற்றும் பணிக்கொடையைப் பெற தகுதி உடையவர்கள் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கருணைத் தொகையின் வரம்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வரும் 17 ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஆளும் பாஜக அரசு, இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.