புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். காங்கிரஸ் சார்பில் பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார்.
இந்தநிலையில் அஸ்வினி குமார் காங்கிரஸில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘‘காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறேன். நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு உகந்த வகையில் இருக்கும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சிக்கு வெளியே, பெரிய அளவில் நாட்டிற்காக என்னால் சேவை செய்ய முடியும். இதுவரை எனக்கு வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.