மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார்.

117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வரும்20ம் தேதி நடைபெற உள்ளது. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் 18ந்தேதி மாலையுடன் ஓய்வு பெறுகிறது. அங்கு ஆட்சியை பிடிக்க முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின்  ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  ‘சிரோன்மனி அகாலி தளம்’ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களப்பணியாற்றி வருகிறத. . இந்த கூட்டணி ஆளும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால், அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக உள்ளது. ஒருபுரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா உள்பட பலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் பாஜகவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் பகுதியில் இன்று ஓட்டு வேட்டையாட வந்த பிரியங்கா காந்தி, முன்னதாக, அங்குள்ள குருத்வாரா ஸ்ரீ திப்பி சாஹிப்புக்கு சென்று வணக்கி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்வர் சன்னியுடன் இணைந்து டிராக்டரில் ரோடு ஷோ மூலம் வாக்கு வேட்டையாடினார். அவருக்கு சாலையின் இருமங்கிலும் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் ஆரவாரத்துடன் பிரியங்காவுக்கு கைகளை அசைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதையடுத்து, ரூப்நகரில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்ததுடன், உங்களுக்கு முன்னால் பிஜேபி மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் இருக்கிறார்கள் – இருவரும் ஒரே விளையாட்டை விளையாடுகிறார்கள். இரண்டும் ஒரே மாதிரியானவை. அவர்கள் இருவரும் எங்கிருந்து தொடங்கினர்? இருவரும் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து தொடங்கினார்கள் என்று கடுமையாக சாடினார்.

மேலும், உங்களுக்கு முன்னாள் 2 பேர்களில்  ஒருவர் குஜராத் மாடல், மற்றொருவர் டெல்லி மாடல். ஆனால் நீங்கள் குஜராத் மாதிரியைப் பார்த்தீர்கள் – யாருக்கும் வேலை கிடைக்கவில்லை, யாருடைய வியாபாரமும் நன்றாக நடக்கவில்லை, யாருக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதேபோல், டெல்லி மாதிரியில் புதிய மருத்துவமனையோ, கல்வி நிறுவனமோ கட்டப்படவில்லை, புதிய வேலைகள் இல்லை என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர், “மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று அவர்களுக்கு நீங்கள்  சொல்லுங்கள். உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் அவர்களுக்கு சொல்லுங்கள். பஞ்சாப் பஞ்சாபியர்களுக்கு சொந்தமானது என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.