முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான சுஷ்மா சுவராஜின் 70வது பிறந்த நாளையொட்டி ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரதமர்
நரேந்திர மோடி
பகிர்ந்து கொண்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு முதல் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தவர்
சுஷ்மா சுவராஜ்
. மிகுந்த நிதானத்துடன் கூடியவர். நிறைந்த அனுபவம் கொண்டவர். மிகச் சிறந்த பேச்சாளர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி மறைந்தார் சுஷ்மா சுவராஜ். அப்போதுதான் பாஜக 2வது முறையாக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகியிருந்தது.
வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அந்த காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் பாஜகவுக்கும் பேரிழப்பாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் இன்று சுஷ்மா சுவராஜின் 70வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, சுஷ்மா குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எழுதியுள்ளதாவது:
நான் ஜலந்தரில் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இன்று சுஷ்மா சுவராஜின் பிறந்த நாள். எனக்கு இப்போது ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. அப்போது பாஜகவுடன் இணைந்து தீவிரப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். குஜராத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்தார் சுஷ்மா சுவராஜ். எனது கிராமமான வேத் நகருக்கு அவர் வருகை தந்தார். எனது தாயாரையும் சந்தித்தார். அப்போது எனது உறவுப் பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஒரு பெயரை முடிவு செய்து வைத்திருந்தனர்.
ஆனால் தன்னை வந்து சந்தித்த சுஷ்மா சுவராஜைப் பார்த்த எனது தாயார், குழந்தைக்கு சுஷ்மா என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிவித்தும் விட்டார். எனது தாய் படிக்காதவர், ஆனால் நவீனத்துவத்தையும் அவர் அறிந்திருந்தார். மாடர்ன் உலகுடனும் அவர் ஒத்துப் போனவர். பார்த்த மாத்திரத்தில் எதையும் தீர்மானிக்கக் கூடியவர்.
சுஷ்மா சுவராஜின் பிறந்த நாளையொட்டி இந்த சம்பவத்துடன் அவரை நான் நினைவு கூர்கிறேன் என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி.