தெலங்கானா
முதல்வராக இருக்கும்
கே.சந்திரசேகர ராவ்
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியில் மூத்த அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்காக 2001ஆம் ஆண்டில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியைத் தொடங்கினார்.
தொடர்ந்து பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் உதயமானது. புதிய மாநிலத்தில் தனது தலைமையிலான ஆட்சியையும் கே.சந்திரசேகர ராவ் அமைத்தார். ஆனால், ஐந்தாண்டுகள் முழுமையடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே சட்டசபையைக் கலைத்து, மீண்டும் தேர்தலை சந்தித்த அவர், மாபெரும் வெற்றியை பெற்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்தால், தேசியக் கட்சிகள் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுவிடுமோ என நினைத்து அதற்கு முன்னரே சட்டமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், தேசிய கட்சிகள் மாநிலத்தில் காலூன்றி விடக் கூடாது என்பதிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், தேசிய அரசியலில் காலூன்ற வேண்டும் என்கிற எண்ணமும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. பிரதமர் கனவில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் பொருட்டு, மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்காக மம்தா பானர்ஜி,
தேவகவுடா
, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன் என அனைத்துத் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
அதேசமயம், மாநில சுயாட்சி தொடர்பாக
பாஜக
மீது அக்கட்சி ஆளாத மாநிலங்களிடம் இருக்கும் எதிர்ப்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும்
கே.சி.ஆர்.
, மத்திய பாஜக அரசு மீதான விமர்சனங்களை தொடர்ந்து அவரது பாணியில் கடுமையாக முன்வைத்து வருகிறார். அவரது அமைச்சரவையில் இருந்த எட்டலா ராஜேந்தர் பாஜகவில் இணைந்தது கேசிஆரை மேலும் சூடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கோலோச்சி விடக் கூடாது என்பதால் கவனமாக இப்போதிருந்தே பாஜக எதிர்ப்பை கடுமையாக முன்னெடுத்து வருகிறார் கே.சி.ஆர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை கடுமையாக தாக்கியதோடு, இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதராம் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மத்தியில் ஆளும் பாஜக அரசின் மத துருவமுனைப்பு அரசியலுக்கு எதிராக சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ள போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா கேசிஆரின் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடன் தொலைபேசியில் பேசிய தேவகவுடா, . நாட்டில் உள்ள வகுப்புவாத அரசியலுக்கு எதிராக போராடி வருவதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளர். அப்போது பேசிய அவர், “ராவ் சாப், நீங்கள் நன்றாக போராடுகிறீர்கள். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டும். நமது நாட்டின் மதச்சார்பின்மை, கலாச்சாரம் மற்றும் அதன் பன்முக கலாச்சாரத்தை பாதுகாக்க நாங்கள் உங்களுடன் இருப்போம், உங்களுக்கு ஆதரவளிப்போம். உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள், எங்களது முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு சென்று தேவகவுடாவை தெலங்கானா முதல்வர் கேசிஆர் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் அவரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.