ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்த வழக்கிலும் குற்றவாளியாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், 4 ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்தாண்டு பிப்ரவரி முதல் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 29ம் தேதியுடன் வழக்கறிஞரின் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது. இதில், லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவருக்கான தண்டனை விவரம் 18ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.