ராம்பூர்: வகுப்புவாத பாடல்களுடன் கூடிய மதச்சார்பற்ற இசையை இசைத்து எதிர்க்கட்சிகள் வாக்குகளை கொள்ளை அடிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப்பதிவில் ராம்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை ஆற்றியுள்ளார்.
ஆனால் இதற்கு முன்பிருந்த கட்சியினர் (மறைமுகமாக சமாஜ்வாதி கட்சியை சாடினார்) வகுப்புவாத பாடல்களுடன் கூடிய மதச்சார்பற்ற இசையை இசைத்து வாக்குகளை கொள்ளை அடித்தனர். இப்போதும் அதையே செய்கின்றனர்.
உ.பி.யில் அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை செலுத்தி பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாக்குகளை அவர்கள் கொள்ளை அடிப்பதைத் தடுக்க பொதுமக்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தனது வாக்கைச் செலுத்திய உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறும்போது, “உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இங்கு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதையே முதல் கட்ட தேர்தல் போக்குகள் காட்டுகின்றன. 2-வது கட்டத் தேர்தலிலும் பாஜகவுக்கே அதிக மக்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.
– பிடிஐ