வாரம் முழுவதும் வேலைக்கு வந்தால் 3 குவார்ட்டர்! – தொழிலாளர்களை ஈர்க்க விபரீத விளம்பரங்கள்!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது ஒரு விளம்பரம். அதில் வெல்டர், ஃபிட்டர் வேலைகளுக்கு ஒரு வாரம் தொடர்ந்து வந்தால் மூன்று மது பாட்டில்கள் கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலையின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உடல் உழைப்பைச் செலுத்தி தினசரி ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களைக் குறிப்பிடுவதுதான் ப்ளூ காலர் வேலைகள். வெல்டர், ஃபிட்டர், கார்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரிஷியன், வெயிட்டர், கயிறு தொழில் போன்ற வேலைகள் இதற்கு உதாரணம். உற்பத்தி, சுரங்கம், கட்டுமானம், இயந்திரங்களைக் கையாளும் தொழிற்சாலைகள், இன்னும் பல துறைகளில் இந்த தொழிலாளர்களின் தேவை இருக்கிறது.
image
ஈகாமர்ஸ் டெலிவரி சேவைகள் தொடங்கி கட்டுமானத் துறை வரை இன்றைய நவீன உலகில் எல்லா இடங்களிலும் இந்த ப்ளூ காலர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட திறன் படைத்த தொழிலாளி தன்னுடைய பணி இடத்தில் திருப்தியடையவில்லை எனில், அதே வேலையை, அதே ஊதியத்தில் மற்றொரு இடத்தில் செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்திருக்கிறது. தினசரி கூலிக்காக உழைக்கும் ஒரு தொழிலாளி ஒரே இடத்தில் நீடித்துப் பணி செய்வதற்கான தேவையும் இங்கு இல்லாமல் போகிறது. இதன்பொருட்டு, தொழிலாளர்களை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள, அவர்களை ஈர்க்கும் விதமான சலுகைகளைப் பணி அமர்த்துபவர்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஒரு ஆண்டு தொடர்ந்து பணியாற்றினால் தீபாவளி சமயத்தில் 10 ஆயிரம் ரூபாய் போனஸ், நீண்டகாலமாக பணி செய்பவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, ஒருமாதம் நிறைவில் புது துணி என விதம் விதமான சலுகை அறிவிப்புகளைக் கொடுக்கிறார்கள் பணி அமர்த்துபவர்கள். இது திறன் தொழிலாளர்களைத் தொடர்ந்து ஒரே இடத்தில் பணி செய்வதற்கு ஊக்கப் படுத்துவதாக இருக்கிறது. அப்படி ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் தான் “ஒருவாரம் தொடர்ந்து வந்தால் மது பாட்டில் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பும்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் குறைந்தது; திறன் தொழிலாளர்களின் நிலையற்ற பணிச் சூழல்; எந்த அமைப்பு முறை கட்டுப்பாடுகளும் இல்லாமல் இவர்கள் முறைசாரா தொழிலாளர்களாகவே இருப்பது ஆகியவை தான், திறன் தொழிலாளர்கள் குறைந்து, அவர்களின் தேவை அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.
image
துறைகளில் காணப்படும் திறன்மிக்கத் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, திறன்மிக்க தொழிலாளர்களுக்கும், அவர்களின் வேலைவாய்ப்பு, தேவை ஆகியவற்றிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். இதுகுறித்த தகவல் பரவலை மேம்படுத்தவும் தேவை இருக்கிறது. இதற்காக நல வாரியங்கள் அமைப்பது, தொழிலாளர் மேப்பிங் செய்வது உள்ளிட்ட பல முயற்சிகளை முன்னெடுக்கின்றன மத்திய – மாநில அரசுகள்.
பலன் சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்க நடைமுறைகளைக் கொண்டுவருவது, திறன் தொழிலாளர்களை அமைப்பு முறைக்குள் கொண்டுவருவது, திறன்மிக்க ஊழியர்கள் தங்களது நீடித்த வாழ்வாதாரத்தைக் கண்டறிய உதவுவது ஆகியவையே இதற்கான தீர்வாக இருக்குமென்பது இத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.