அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும்- பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி:
உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
குஜராத்திலும் தற்போது தேசிய அளவிலும் ஆக  20 ஆண்டுகளாகப்  பொறுப்பில் உள்ள எனக்கு, சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் முக்கிய கவனம் பெறும்  துறைகளாக உள்ளன. 
காலநிலை நீதி மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சாத்தியமாகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தித்  தேவை இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை மறுப்பது கோடிக்  கணக்கானவர்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமமாகும். வெற்றிகரமான காலநிலை நடவடிக்கைக்கு போதுமான நிதியுதவியும் தேவை. இதற்கு, வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஏழைகளுக்கும் சமமாக எரிசக்தி கிடைக்க வேண்டும் என்பதே நமது சுற்றுசூழல் கொள்கையின் சாராம்சம் ஆகும். உஜ்வாலா திட்டம் மூலம் 9 கோடி வீடுகளுக்குச் சமையல் எரிவாயு  வழங்கப்பட்டுள்ளது. PM-KUSUM திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விவசாயிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சோலார் பேனல்களை அமைக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு விற்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கிறோம்.
சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வாயிலாக, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம். எப்போதும் உலகளாவிய கட்டமைப்பிலிருந்து தூய்மையான ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்ய நாம் பணியாற்ற வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.