சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்! பழவேற்காட்டுக்கு வந்தவர்கள், மேடான ஒரு இடம் தேடி வந்தார்கள். அந்த இடத்தில் கோட்டை அமைத்தார்கள். அதுதான் இன்று சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகும். எனவே, கோட்டைக்குப் பாதை அமைத்த மாவட்டம்- இந்த திருவள்ளூர்!
அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த மாவட்டம், பழமையான மாவட்டமாக இருந்தாலும், அதை நவீன மாவட்டமாக மாற்றியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்! திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றி பல தொழிற்சாலைகள் தொடங்கக் காரணமானது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஒன்றை சொன்னால், அதை நிச்சயம் செய்யும்! என்னதான் பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்! ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்! இதை அனைத்தும், அ.தி.மு.க. அரசு நிதிநிலையை சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம்!
சீரழிப்பது மட்டும்தான் ‘பழனிசாமி – பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனிக்குத்’ தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன். இதுதான் அ.தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டின் கடன், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்!
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 60 ஆண்டுகளாக 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடனை, பத்தே ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மலையளவு கடனை வைத்துவிட்டுத் தமிழ்நாட்டு நிதிநிலைமை வரலாற்றில் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்கள். இப்போது நாம் தமிழ்நாட்டையும்- தமிழ்நாட்டின் நிதிநிலைமையையும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படிப்பட்ட நிலையில்தான், நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை- உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம். விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்று சொன்னால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! உள்ளாட்சி அமைப்புகளிலும் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுங்கள். உங்கள் ஊரில், உங்களோடு இருந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.