பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பாணியில், ரெயில் வரும் போது தண்டவாளத்தை கடக்க முயன்று பைக்கை ரெயிலுக்கு பலி கொடுத்த சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது.
இது எப்படிங்க முடியும் ? என்று சராசரி பார்வையாளனும் கேட்கும் வகையிலான கிராபிக்ஸ் ஆக் ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கிச்சி கிச்சி மூட்டுவது தெலுங்கு சினிமாவின் ஆக்சன் அவதாரமாக கொண்டாடப்படும் நடிகர் பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் வழக்கம்.
அப்படிப்பட்ட பாலையாவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு நிஜத்தில் ஒரு விபரீத சம்பவத்தில் சிக்கி நூலிலையில் உயிர் தப்பி உள்ளார் மும்பையை சேர்ந்த பைக்கர்.
சம்பவத்தன்று தனது பைக்கில் ரெயில் வருவது தெரிந்தும் தண்டவாளங்களை அசால்டாக கடக்க முயன்ற அந்த இளைஞர், புயல் போல ரெயில் வருவதை பார்த்ததும், அச்சம் தொற்றிக் கொள்ள தண்டவாளத்தின் பக்கவாட்டு பகுதியில் பைக்கை போட்டு விட்டு தாவிக்குதித்தார். அடுத்த நொடி அவரது பைக் ரெயிலின் அதிவேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் உடைந்து நொறுங்கி பஸ்மபானது.
ஒருபக்கம் அந்தபைக் சின்னபின்னமாகி சிதறிகிடக்க, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நூலிலையில் உயிர் தப்பினார் அந்த இளைஞர்
அதனை தொடர்ந்து அவர் எழுந்து நடந்து சென்ற காட்சியை சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன் கள் என்ன தல அடி பலமோ ? என்று கைப்புள்ளயாக பாவித்து கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர்.
ரெயில் தண்டவாளங்களை மெத்தனமாக கடக்கும் வாகன் ஓட்டிகளுக்கு இது எச்சரிக்கை பாடம் என்றாலும் இந்த சம்பவம் சொல்லும் உண்மை ஒன்று தான் அவசரம் இல்லா மனிதன் உலகில் இல்லை, ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் விதிகளை மீறி நிதானம் தவறிச் செல்வோருக்கு இழப்பு எப்போதும் இரு மடங்காக இருக்கும் என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் நீதி.!