கீவ்:கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி, இந்திய துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.
தன் அண்டை நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக,ரஷ்யா அதன் எல்லையில் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அங்கு போர் மூளும் சூழ்நிலை நிலவுகிறது. இதை தடுக்க மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள இந்திய துாதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும். தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லாத மாணவர்கள் வெளியேற வேண்டும்.
உக்ரைனின் பல பகுதிகளில் உள்ள இந்தியர்கள், தங்களுடைய நிலவரம் குறித்து, துாதரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர காலத்தில் தொடர்பு கொள்ள அது உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீனா ஜீன் பியரே கூறியுள்ளதாவது:பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். எல்லைப் பிரச்னையை பேச்சு வாயிலாக தீர்வு காண ரஷ்யா முயற்சிக்க வேண்டும்.உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுத்தால், அது கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
படைகளை குறைக்கும் ரஷ்யா
உக்ரைனில் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் ரஷ்யாவுடன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர். இதையடுத்து ரஷ்யா, தன் பிடிவாதத்தில் இருந்து சிறிது இறங்கி வந்துள்ளது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், தங்கள் முகாமுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லையில் உள்ள ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாக கணிசமாக குறைக்கப் பட்டு உள்ளதாக, உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய உக்ரைன் பிரச்னையில், மேற்கத்திய நாடுகள் எழுப்பியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக பேச தயாராக உள்ளோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயப்படுவதுபோல் அடுத்த சில நாட்களுக்குள் எந்த தாக்குதலும் நடத்தப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement