திருப்பூர் மாநகராட்சி
ஆளும்கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலம் எப்போதும் கண்டம்தான். தற்போதைய அமைச்சரவையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு பவர்புல்லாக தெரிந்தாலும், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும்தான் தி.மு.க வென்றது.
அதில் 2 தொகுதிகள் புறநகர் பகுதியை சேர்ந்தவை. மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க-வை விட, அ.தி.மு.க-வே அதிக வாக்குகளை பெற்றது. சிறுபான்மை மக்கள் வசிக்கும் தெற்கு பகுதியில் மட்டுமே தி.மு.க கணிசமான வாக்குகளை பெற்றது.
சவால்கள்:
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணிகள், பாதாள சாக்கடை பணி எதுவும் நிறைவு பெறவில்லை. இதனால், எந்தப் பகுதிக்கும் எளிதில் சென்று வரமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி வதைக்கிறது. தொழில் அடிப்படையில் டாலர் சிட்டி என்றழைக்கப்பட்டாலும்,
அடிப்படை வசதிகளை பொறுத்தவரை திருப்பூர் சிட்டி ஜீரோ தான் என்கிறார்கள். மாநகராட்சிக்கு என்று ஓர் குப்பை கிடங்கு கூட இல்லை. மாநகராட்சியின் நிதியைப் பற்றி பேசினாலே அதிகாரிகள் அமைதியாகிவிடுகின்றனர்.
வரிவசூலில் சுணக்கம் காட்டுகின்றனர். வருவாய் பாதிக்கப்படுவதால், மாநகராட்சி தரப்பில் செலுத்தவேண்டிய மின் கட்டணம் பாக்கி கோடிகளை தொட்டுவிட்டது. திருப்பூர் மாநகராட்சியில் அரியணை ஏறுபவர்களுக்கு இந்தப் பிரச்னையை சரிசெய்வதே பெரும் சவாலாக இருக்கும்.
திமுக vs அதிமுக:
அப்படியே தேர்தல் பக்கம் வந்தால், மொத்தம் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க 32 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் 28 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக 58 வார்டுகளிலும், த.மா.கா 2 வார்டுகளிலும் போடடியிடுகின்றன. ஆனால், 60 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னம் தான் களம் காண்கின்றனர்.
சீட் கிடைக்காத அதிருப்தியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த பலர் ஆங்காங்கே சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட சுயேச்சைகைள் போட்டியிடுவது, இரண்டு கட்சிக்குமே ஆபத்துதான். தவிர தி.மு.கவை பொறுத்தவரை, அமைச்சர் சாமிநாதன் கோஷ்டி, செல்வராஜ் எம்.எல்.ஏ கோஷ்டி என்று ஏகப்பட்ட உள்கட்சி பூசல் நிலவுகிறது.
செல்வராஜின் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். சாமிநாதனின் ஆதரவாளரும், மற்றொரு மாவட்ட பொறுப்பாளருமான இல.பத்மநாபன் திருப்பூர் மேயர் ரேஸில் முன்னணி வகிக்கிறார்.
அதேபோல வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உதயநிதி செல்வாக்கில் மேயர் பதவிக்கு தனி ரூட் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.
அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் மட்டுமே மேயர் ரேஸில் இருக்கிறார். மாநகராட்சி மொத்தமும் தேவையான ஸ்வீட் பாக்ஸ்களை இறக்குகிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளதால்,
முன்னாள் அமைச்சர் வேலுமணி, குணசேகரன் பெயரையே டிக் அடித்து விட்டார். 60 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது, கடந்த சில ஆண்டுகளாக செய்துள்ள தேர்தல் களப்பணி அ.தி.மு.க-வுக்கு பிளஸ். அதேநேரத்தில் 32 வார்டுகளிலும் மட்டுமே போட்டியிடுவது தி.முக-வுக்கு மைனஸ்.
கூட்டணிக்கு கிட்டத்தட்ட 50 சதவிகித வார்டுகளை( 28 வார்டுகள்) ஒதுக்கியிருப்பதால், தேர்தல் முடிவுகளை பொறுத்து கூட்டணி கட்சியினரும் மேயர் பதவி கேட்க வாய்ப்பிருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியின் சகல விவரங்களையும் அ.தி.மு.க அப்டேட்டாக வைத்துள்ளது. ஆனால், தி.மு.க-விடம் அதுகுறித்த போதுமான தரவுகள் இல்லை.
இதனால் கடைசி நேரத்தில் அ.தி.மு.கவில் வலுவாக உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே குதிரை பேரம் நடத்தி வருகின்றனராம். அ.தி.மு.க-வில் திருப்பூர் மாவட்டத்துக்கு வேலுமணிதான் பொறுப்பாளர்.
அதேபோல, சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளராக உள்ளார். இருவருமே தேர்தல் அரசியலில் கோலோச்சியவர்கள். கோவையில் வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்யவும், தி.மு.க-வை வளர்க்கவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார்.
தி.மு.க-வுக்கு திருப்பூரில் 2 அமைச்சர்கள், 1 எம்.எல்.ஏ இருந்தும் அ.தி.மு.க-வுக்கு கடுமையான போட்டி கொடுப்பது போல எந்த அறிகுறியும் தென்படவில்லை. பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து மேஜிக் நடத்த தான் தி.மு.க திட்டமிட்டுள்ளதாம். மக்கள் என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்!