திருச்சி மாநகராட்சி
தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராகவே அவ்வப்போது பேசப்படும் திருச்சி மாநகரம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஆரவாரமாகச் சந்தித்து வருகிறது. மலைக்கோட்டை மாநகரின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்காகக் கட்சிகளிடையே பிரசார யுத்தங்கள் நடந்து வருகின்றன.
திமுக
‘திருப்பு முனையை ஏற்படுத்தும் திருச்சி’ என்கிற சென்டிமென்ட்டில் தீர்க்கமாக இருக்கிறது தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வை ஒன்பது தொகுதிகளிலும் ‘வாஷ் அவுட்’ செய்து திருச்சியை தங்களது கோட்டையாக மாற்றிக் காட்டினார் அமைச்சர் கே.என்.நேரு. அதே போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கடுமையான அஸ்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வும் களத்தில் அனல் பறக்க, மோதிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் நேருவா… அன்பில் மகேஷா என்கிற அதிகார போட்டியில் உடன்பிறப்புகளின் குடுமி பிடிச்சண்டையும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
பிரச்னைகளும் சவால்களும்..!
திருச்சியில் தி.மு.க-அமைச்சர்களான கே.என் நேரு,அன்பில் மகேஷின் வேகத்திற்கு டப் பைட் கொடுக்கமுடியாமல் அ.தி.மு.க. தள்ளாடுகிறது என்றே சொல்கிறார்கள்.
திருச்சி மாநகராட்சி தேர்தல் களத்துக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்வோம்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீண்டகால திட்டங்களாக பெரிதாக எதையும் செய்யவில்லை. மாநகரை அழகுபடுத்துகிறோம் என்கிற ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல முறைகேடுகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் அதிகாரிகளின் துணையுடன் எல்.இ.டி லைட், வாய்க்கால் தூர்வாரியது, உடற்பயிற்சி கூடம் (ஜிம்), பூங்கா அமைப்பது எனப் பணத்தை எளிதாக எதில் எடுக்கமுடியுமோ அந்தத்திட்டங்களை எல்லாம் அவசர கதியில் நிறைவேற்றி பணத்தை எடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மற்ற கட்சியினர். அதன் புள்ளிவிவரங்களை நேரு கையில் எடுத்து வைத்திருக்கிறார்.
அதே போல், திருச்சியில் மாநகராட்சி நிதிச்சுமையால் சற்றே தள்ளாட ஆரம்பித்திருக்கிறது. மாநகர ஊழியர்களுக்குச் சம்பளம் போடக்கூடப் பணம் கையிருப்பு இல்லாமல் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வசூல் செய்யப்படும் பணத்தைக்கொண்டு அதிகாரிகளுக்குச் சம்பளம் போட்டுச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. குடிநீர், சாலைவசதி, பாதாளச் சாக்கடை திட்டம் போன்ற பல திட்டங்கள் பாதியிலேயே கிடக்கிறது. மழைக் காலங்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மாநகரே ஸ்தம்பித்தது. உய்யக்கொண்டான் வாய்க்காலை முறையாகத் தூர்வாரி அதில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவேண்டும்.
மத்திய பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் பல இடங்கள் சுகாதாரமற்று இருப்பதாகவும், சாலைகள் தரமற்றதாகவும் இருக்கின்றன. இதுபோல் மாநகரில் பல பிரச்னைகள் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியில் அமர்ந்ததும் இப்பிரச்னையைச் சரிசெய்யவே குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
திமுக:
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் மேயராக இருந்த அனைவருமே பெண்கள்தான் என்பது மிக முக்கியமான விஷயம். அதிலும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. துணை மேயர் பதவியை மட்டும் மாநகரச் செயலாளர் அன்பழகன் வகித்துள்ளார். காங்கிரஸ், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே மேயராக இருந்துள்ளனர். இந்த முறை, பொதுப்பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் இரண்டு தரப்பினருக்கும் போட்டி அதிகமாகியுள்ளது என்கிறார்கள்.
திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில் 15 வார்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 50 வார்டுகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இவற்றில் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் 22 வார்டுகளும், அன்பில் மகேஷ் கட்டுப்பாட்டில் 28 வார்டுளும் இருக்கின்றன. இவற்றில் எந்த கோஷ்டி அதிக வார்டுகளில் ஜெயித்து கவுன்சிலர்களைப் பிடிக்கிறதோ, அவர்கள் பரிந்துரைக்கும் நபருக்கே மேயர் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் தான் சர்ச்சையே என்கிறார்கள்.
மேயர் பதவிக்கு அக்கட்சியின் மாநகரச் செயலாளர், முன்னாள் துணை மேயரான அன்பழகன், மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு. இதில், கே.என்.நேருவின் ஆசியும், ஆதரவும் அன்பழகனுக்குத் தான்.
மதிவாணனுக்கு அன்பில் மகேஷ் ஆதரவு கொடுத்துவருகிறார். இந்நிலையில் அண்மையில் திருச்சி தென்னூரில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய நேரு, ”திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். அன்பழகனுக்கு மேயர் பதவி வேண்டும் என முதல்வரிடம் கேட்கும் இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார்.
ஆகமொத்தம் அன்பழகன் மேயராக வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆனால் அன்பில் மகேஷ் வழக்கத்தை விட இம்முறை சைலெண்ட் மோடுக்குச் சென்றுவிட்டாராம். காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றது.
உட்கட்சி பால்டிக்ஸ் வந்ததால் திருச்சியைக் கோட்டை விட்டோம் என்றும் அதுவும் மகேஷ் அணியால் நடந்து விட்டது என்கிற வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கிறாராம். மறுபுறம் அன்பழகன் வெற்றி பெறக்கூடாது என்று மதிவாணனும், மதிவாணன் பெற்றி பெற்றுவிடக்கூடாது அன்பழகனின் ஆதரவாளர்களும் மறைமுக வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கக் கட்சிக்காக உழைத்த அடிமட்ட நிர்வாகிகள் பலரும் சீட் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களும் தி.மு.க-விற்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு செக் வைத்த நேரு!
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் பொறுப்பு வகித்த சுஜாதா, மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் மேயர் பதவியைக் குறி வைத்துள்ளனர். கூட்டணி ஒதுக்கீட்டில் தங்களுக்கு மேயர் அல்லது துணை மேயர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சிலர் காய் நகர்த்துகின்றனர்.
இந்த இரண்டு கட்சிகள் தவிர அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அக்கட்சியின் மேயர் வேட்பாளர் குறித்த பேச்சும் பெரிதாக அடிபடவில்லை. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
65 வார்டுகளில், 50 இடங்களில் போட்டியிடும் தி.மு.க, மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் மேயர் பதவி யாருக்கும் இல்லை. தி.மு.க-வுக்கு தான் என்பதனை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிவிட்டார் நேரு என்கிறார்கள்.
அதிமுக:
மகனை மேயர் பதவியில் அமர வைக்கத் துடிக்கும் வெல்லமண்டி!
திருச்சி அ.தி.மு.க-வில் ஒரு பவர்ஃபுல் முகம் இல்லை என்பதுதான் உண்மை. அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தனது மகன் ஜவஹர்லால் நேருவை, வைத்திலிங்கத்தின் ஆசியால் மேயராக்க வேண்டும் என களம் இறக்கியிருக்கிறார். வெல்லமண்டி நடராஜன் பதவியில் இருக்கும் போதே பெரிதாக எதையும் செய்யவில்லை என்கிற இமேஜை வளர்த்துக்கொண்டவர்.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது நிலையை கேட்கவே வேண்டாம் என்கின்றனர். அதே போல், மற்றொருவர் ஆவின் கார்த்திகேயன், ஆவின் சேர்மனான இவர், எடப்பாடி வீட்டின் கிச்சன் கேபினட் வரையிலும் நெருக்கத்தில் இருக்கிறார். மாவட்டச் செயலாளர் எதிர்ப்பை மீறி தன் தம்பி அரவிந்தனைக் களம் இறக்கியுள்ளார். எப்படியாவது தனது தம்பியை வெற்றிபெற வைக்கக் கேட்கும் இடங்களுக்கெல்லாம் வைட்டமின்-களை இறக்கிக்கொண்டிருக்கிறார்.
அவரைத்தொடர்ந்து, முன்னாள் துணைமேயரான சீனிவாசன், இம்முறை மேயர் கனவில் வலம் வருகிறார். அ.ம.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-விற்கு வந்திருக்கிறார். ஒருவருக்கு உதவி செய்தால் கூட அதில் தனக்கு என்ன பயன் என்று பார்க்கக்கூடிய மனிதராம் இவர்.
கள நிலவரங்களை பார்க்கையில் அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் பணத்தை வெளியில் எடுக்கவே யோசிக்கிறார்கள். தற்போதைய சூழலில் அமைச்சர் நேருவின் களப்பணியாலும் ஒருங்கிணைப்பினாலும், உள்ளடி வேலை பெரிதாய் இல்லாததாலும், மாநகராட்சி மேயர் ரேஸில் தி.மு.கவே முந்திச் செல்கிறது!