ஹிஜாப் விவகாரத்தில் டிரெண்டான முஸ்கான் என்ற பெண் தனக்கு வெகுமதியாக கிடைத்த பணத்தை மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் காவி துண்டினை அணிந்து “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, “அல்லாஹு அக்பர்” என்று பதில் கோஷம் எழுப்பினார் ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கான் கான்.
இந்தியா முழுவதிலும் இருந்து முஸ்கான் கானுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், பலரும் வெகுமதி பரிசுகளை அறிவித்தனர்.
இந்த விவகாரம் நடந்த போது, தனக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதுணையாக இருந்ததாகவும் முஸ்கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு வெகுமதியாக வந்த பணத்தை மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாங்கிதர முடிவு செய்துள்ளதாக முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு நபர் 5 லட்சம் கொடுத்தார். நாங்கள் அதனைப் பயன்படுத்தி மாவட்ட மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் முஸ்கான் பெயரில் வழங்க உள்ளோம். அதற்கு மேலும் தேவைப்பட்டால் நாங்கள் சொந்த பணத்தில் அதனைச் செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.