ஓமிக்ரோன் வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற அனைத்து கொவிட் தொற்றாளர்களும் ஒமிக்ரோன் வைரஸ் வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். ஓமிக்ரோன் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சிரேஷ்ட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ குறிப்பிட்டார்.
‘இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் நோயாளர்களில் பலர் ஓமிக்ரான் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மீண்டும் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படலாம். அவருக்கு பல முறை தொற்று ஏற்படலாம். இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் திரிபு அல்ல என்று கூறப்பட்டது. ஆனால் அது தவறான கருத்து. இதனால் பாதிக்கப்பட்டு அனர்த்த நிலைக்கு உள்ளான நோயாளர்கள் பலர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பல நோயாளர்கள் உள்ளனர். எனவே, தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மிக அவசியம் என்றும் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ மேலும் தெரிவித்துள்ளார்.